Tagged: சென்னை Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • காஞ்சி ரகுராம் 7:04 am on May 8, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: சென்னை, டாடா மார்கோபோலோ, பேருந்து, யூஸபிலிட்டி, வசதி   

  யூஸபிலிட்டியுடன் ஒரு பேருந்து – டாடா மார்கோபோலோ 

  அப்பாடா… சென்னை மாநகரப் பேருந்துகளிலேயே முதன் முறையாக, முன் சீட்டில் கால் முட்டி உராய்ந்து ஜிவுஜிவுக்காமல் நிம்மதியாக அமர முடிந்தது. கால்களுக்கும் மனமுண்டு என அதற்குரிய இடவசதியைத் தந்த பேருந்து, இப்போது சென்னையில் பரவலாக ஓடத் தொடங்கியிருக்கும் டாட்டாவின் மார்கோபோலோ.

  கணினிக்கான மென்பொருள்களை உருவாக்கும்போது, அதைப் பயன்படுத்தும் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக, எளிமையாக, உபயோகத்திறனைக் அதிகரிக்கக் கூடிய யூஸபிலிட்டி தியரியைக் கொண்டு வடிவமைக்கிறார்கள். இத்தியரியை பேருந்து வடிவமைப்பிலும் புகுத்தியிருக்கிறது டாடா நிறுவனம். இதனால் பல வசதிகள். அவைகளில் சில:

  சச்சின், இஷாந், தோனி… இவர்களைப் பாருங்கள். வெவ்வேறு உயரங்களில் இருப்பதுதான் இந்தியர்களின் உடல்வாகு. ஆனால் தற்போதைய பேருந்துகளில் உயரம் குறைவான பயணிகள் நிற்கும்போது பிடித்துக்கொள்ள வசதியாக குறுக்குவாட்டுக் கம்பிகள் இருப்பதில்லை. அது இங்கே மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு கம்பி அதே உயரத்திலிருக்க, இரண்டு கம்பிகள் சீட்டு வரிசையின் விளிம்பில் மேல் தாழ்வாக கைப்பிடி ஹாண்டில்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. தீர்ந்தது பிரச்சனை. எவ்வுயரத்தவரும் குதுப்மினார் போல உறுதியாக நிற்கலாம். மேலும் இக்கம்பிகளைப் பிடிக்க பயணிகள் ஓரமாக நிற்பதால், அதிக இடவசதியும் கிடைக்கிறது.

  வாயில்கள்: இரு வாயில்களையும் வழக்கத்தை விட அகலமாக்கி, முன் வாயிலை சற்றே நடுப்பகுதியை நோக்கி நகர்த்தி விட்டார்கள். இதனால் உள்ளே எங்கிருந்தாலும் உடனே வாயிலை அடைய முடிவதால் வாயில் அருகே ஏற்படும் தேவையற்ற நெரிசல் தவிர்க்கப் படுகிறது.

  வாயிற் கதவுகள்: தானியங்கிக் கதவுகளால் தொல்லைகளும் அதிகம். அவை படிக்கட்டுகளின் பெருமளவு பகுதியை ஆக்கிரமிக்கின்றன. மேல் படிக்கட்டுகளும் குறுகலாக இருக்க வேண்டியிருக்கிறது. கதவுகளும் அங்கே யாரேனும் இருந்தால் முட்டிக் கொண்டே மூடுகின்றன. மடித்துக் கொள்ளும் தானியங்கிக் கதவுகள் அறிமுகப்படுத்தியதில் இப்பிரச்சனைகள் தீர்ந்தன. அவை முதல் படிக்கட்டிலேயே அடங்கி விட்டதில், அனைத்து படிக்கட்டுக்களும் ஒரே அளவில் இருக்கின்றன. கதவடியில் பிரஷ்கள் பொருத்தியதில், அவை மூடிக் கொள்ளும் போது படியில் இருக்கும் மண்ணைப் பெருக்கி வெளித்தள்ளி விடுகின்றன. படிக்கட்டும் சுத்தமாச்சு.

  சீட்டுகள்: தாழ்தள சொகுசுப் பேருந்து என்று ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் பல சீட்டுகளில் உட்காரவே முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருக்கும். நாம் கர்ப்பத்திலிருந்ததைவிட உடலை குறுக்கிக்கொண்டுதான் உட்கார வேண்டும். டிரைவர் இடப்பக்கம் டயருக்கு மேல் இருக்கும் சீட்டுதான் ரொம்ப மோசம். தரை தட்டுப்படாததில் ஒரு கால் தொங்கிக் கொண்டே இருக்கும். இப்பிரச்னையும் தீர்ந்தது. பேருந்தின் நீளத்தை சற்றே நீட்டி, வாயில்களின் இடமாற்றத்தால் கிடைத்த இடத்தை சரியாகப் பயன்படுத்தி, சீரான இடைவெளியில் கிட்டதட்ட சீரான உயரத்தில் சீட்டுகள் அமைந்ததில் அப்பாடா என்று அமர முடிகிறது.

  கியர் கம்பி: இவை சற்றுப் பழசானால் லொடலொடவென ஆடிக் கொண்டிருக்கும். ஒரு முறை, தன்னைவிட வேகமாக இது ஆடுவதைப் பார்த்த குடிமகன் இதைப் பிடித்துகொள்ளப்போக டிரைவர் பதறி அலறி எழுந்த கூத்தையும் பார்த்திருக்கிறேன். இதை, காரில் இருப்பதைப் போல கையடக்கமாக மாற்றி டிரைவருக்கு அருகில் வைத்ததில், அவருக்கும் வசதியாச்சு, நிற்பதற்கு இடமும் அதிகமாச்சு.

  இப்படி பல வசதிகளை யோசித்து யோசித்து வடிவமைத்திருக்கிறது ஒரு டீம். சற்றே கண்மூடி மனசுக்குள் அவர்களைப் பாராட்டி, அவர்களுக்காக பிரார்த்தித்து இமை திறந்தேன்.

  நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங்கை எப்பவோ தாண்டிச் சென்று கொண்டிருந்தது… டாடா மார்கோபோலோ.

   
 • காஞ்சி ரகுராம் 7:19 am on April 5, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அணு மின்நிலையம், அபாயம், கதிர் வீச்சு, கல்பாக்கம், , கூடங்குளம், சென்னை, ஜப்பான், பாதுகாப்பு   

  கல்பாக்கம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதா? 

  கல்பாக்கம் அணு மின் நிலையம்

  கான்கிரீட் கலவையைக் கொட்டியாவது அணுவின் கதிர்களைக் கட்டுப்படுத்த ஜப்பான் நினைக்கிறது. திறமைக்கும், உழைப்பிற்கும், அரசு விசுவாசத்திற்கும் பெயர் பெற்ற ஜப்பானிற்கே இக்கதியென்றால்… நமது கூடங்குளம், கல்பாக்கத்தின் நிலை? அதுவும் நாம் கண்ட சுனாமியின் ரணங்கள் இன்னமும் ஆறாத போது? ஒரு சாமான்ய மனிதனாய் என் மனமும் சலனப்பட்டது.

  சமீபத்தில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றபோது நடந்த ஒரு சிறு சம்பவம் என் சலனத்தை கடலாக்கியது.

  அது ஒரு இளங்காலை.

  பக்கத்து நகரிலிருந்து வரப்போகும் பேப்பர் பையனுக்காக, வாசல் திண்ணையில் கால்நீட்டி அமர்ந்திருந்தேன். அன்றைய தின சுழற்சிக்கு அக்கிராமம் தயாராகிக் கொண்டிருந்தது. பொதியிழுக்க தினவெடுத்து சில காளைகள் செல்ல, அதைத் தொடர்ந்து ஒரு வாத்துக் கூட்டம் தன்னொலிகளை ரம்மியமாக எழுப்பியபடி நகர்ந்தது.

  ஆஹா, இன்று இயற்கையை ரசிக்க வாய்த்திருக்கிறது. விழிகளைச் சுழலவிட வேண்டியதுதான் என எண்ணியபோது என் பார்வை, வாசல் தூணில், திருஷ்டி பொம்மைக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு வஸ்துவில் தட்டுப்பட்டு நின்றது.

  அது மூணங்குல சதுர வெள்ளை வஸ்து. அழகாக லேமினேட் செய்யப்பட்டு ஒரு தடிமனான நூலில் தொங்கிக் கொண்டிருந்தது. கிட்டதட்ட ஐ.டி கம்பெனியின் ஆக்ஸெஸ் கார்டு மாதிரி இருந்தது.

  அட இது என்ன? திருஷ்டி பொம்மைக்குக் கூட ஆக்ஸெஸ் கார்டு கொடுக்கிறார்களோ?! எனக் குசும்பாய் நினைக்கும்போதே, வாசலில் ஒரு ஜீப் வந்து நிற்க, அதிலிருந்து இரண்டு அதிகாரிகள் இறங்கினர். ஐயோ, சிபிஐ இங்கேயும் வந்து விட்டதோ எனத் திகிலடைந்தேன். சேச்சே… இப்போ கடந்து சென்ற வாத்தைவிட நாம்தான் அப்பிராணியாச்சே எனத் தெளிந்து, அவர்களை முறுவலித்து வரவேற்றேன்.

  பதில் முறுவல் தந்த அவர்கள், நேராக அந்த வஸ்துவிடம் சென்று, வேறேதோ கருவி கொண்டு அதை உற்று நோக்கினர். பின் அதை எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக புதியதொன்றை மாட்டி விட்டனர். அப்போது என் உறவினர் அவ்விடம் வர, ஒருவர் அவரை நலம் விசாரித்து தான் கொண்டு வந்த கேனில் எங்கள் வீட்டு கிணற்று நீரை பெற்றுக் கொண்டார். மற்றவர் அக்கம்பக்க வீடுகளுக்குச் சென்று, கீரை, கத்திரிக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை பெற்றுக் கொண்டு வந்தார்.

  ‘அட, என்னதான் நடக்கிறது இங்கே?’ என நான் குழம்பிய போது, ஜீப்பின் முகப்பில் தென்பட்ட வாசகம்: கல்பாக்கம் அணு மின் நிலையம்.

  அவர்கள் புறப்பட்டதும் உறவினர் விளக்கினார். “காத்துல அணுவோட ரேடியேஷனை பதிவு செய்யும் கருவி அது (அந்த வஸ்து). மாசம் ஒருவாட்டி காத்துல, தண்ணில, இங்கே விளையறத வெச்சு மண்ணுல அணுவோட ரேடியேஷனை கணக்கிடுகிறார்கள்…” அவர் சொல்லச் சொல்ல என்னுள் ஓராயிரம் அணுக்கள் வெடிக்கத் தொடங்கின.

  கூவக்கரை வீட்டின் கொசுக்களைப் போல, அணுவின் கதிர்கள் எப்போதும் நம்மை சுற்றிச் செல்கின்றனவா? சரியாக இயங்கும் நிலையிலேயே இப்படி என்றால்? அணு உலையின் திசையில் சுனாமி சீறினால் இக்கிராமத்தின் கதி? கல்பாக்கத்திலிருந்து 50 கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் இவ்விடத்தையே கதிர்கள் கைவீசி கடக்கின்றன என்றால், இடைப்பட்ட இடங்களின் கதி? நினைக்கவே முடியவில்லை. இன்னொரு தசாவதாரக் கதையை ஆக்கவோ, பார்க்கவோ அணு விட்டு வைக்காது.

  சுற்றும் பூமியின் வெளியில், வளி மட்டும் சுற்றிய காலம் டைனோசர்கள் வாழ்ந்த நாட்கள் மட்டும்தானா? இன்று இப்பாதுகாப்பற்ற நிலை ஏன்?

  மனிதனின் பெருகி விட்ட தேவைகளால், விஞ்ஞானமயமாக்கல் எல்லைகளைக் கடந்து விட்டது. அண்டத்தின் கதிர்களிடமிருந்து காத்த ஓசோனை ஓட்டை போட்டதோடு மட்டுமல்லாமல், உள்ளிருந்தே கணக்கற்ற கதிர் வீச்சுகளுக்கு அடிகோலிவிட்டது அறிவியல்.

  கோடிக்கணக்கான உயிரினங்கள் ஆனந்தமாக வாழ, அனைத்து வளங்களுடன் படைக்கப்பட்ட பூமி அறிவியலால் மாசடைந்ததில், பல இனங்கள் என்றோ மடிந்து விட்டன. மனித இனமும் அக்கதி நோக்கியே.

  அணுவைத் துளைத்து ஏழு கடல்களைப் புகுத்தி… அன்று பாட்டி சொன்னது, இன்று விபரீதமாய்த் தொணிகிறது.

   
  • கீதப்ப்ரியன்|geethappriyan 11:50 முப on ஏப்ரல் 5, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   மிகவும் உண்மை
   நமது பெருகிவிட்ட தேவைகளுக்காக சுற்றுப்புறத்தை குப்பைக்காடாக்கியதன் பலன் தான் அது.கேன்சர் கல்பாக்கம் என்றே அழைக்க துவங்கிவிட்டனர்.
   http://ravittp.blogspot.com/2008/09/blog-post_9389.html

  • கீதப்ப்ரியன்|geethappriyan 12:07 பிப on ஏப்ரல் 5, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

  • வலிபோக்கன் 7:56 முப on ஏப்ரல் 6, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   போபால் விஷவாயு வந்தபோதே.எங்களால் ஒன்னும் செய்யமுடியல.இனி மேலுமா சுதாரிக்கபோறோம்

  • நெல்லி. மூர்த்தி 8:57 முப on ஏப்ரல் 6, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   என்று ஜப்பான் அணு மின் நிலையத்திற்கு சிக்கல் அன்றே நாம் நமது கல்பாக்கம் உள்ளிட்ட அனைத்து அணு மின் நிலையப் பாதுகாப்புக் குறித்து ஐயப்படவேண்டி உள்ளது. இது போன்ற சிக்கலுள்ள விஷயத்திற்காகவா கம்யூனிஸ்டுகளைப் பகைத்துக் கொண்டு அமெரிக்காவுடன் மன்மோகன் அரசு குறியாக இருந்தது? கம்யூனிஸ்டுகளின் போக்கினால் தான் ஏனோ நாடே பின் தங்கியுள்ளது போல ஒரு மாயை உருவாக்கி அவர்களை சாடினார்கள். நமது அரசியல்வாதிகளாகட்டும், அதிகாரிகளாகட்டும், ஆளும் வர்க்கத்திற்கு தலையாட்டுவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, விளைவின் தன்மையைக் குறித்தோ, விழிப்புணர்வோ போதுமான அளவில் இல்லை என்பதே உண்மை.

 • சித்ரன் ரகுநாத் 1:26 pm on July 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: அடையாறு, அட்ரஸ், குடி, சென்னை, போதை, முகவரி, விஸ்கி   

  விஸ்கி 

  என் நண்பர் ஒருவர் அடையாறில் ஒரு வீட்டுக்கு புதிதாய்க் குடி போயிருந்தார். இன்று அவர் அழைப்பின் பேரில் அவர் வீட்டைத் தேடிப் போனேன். அவர் சொன்ன வழியும் அடையாளங்களும் மண்டைக்குள் இருந்தது. மெயின் ரோட்டிலிருந்து சட்டென்று பார்த்தால் தெரியாத கிளை மெயின் ரோட்டில் உள்ளே வரவேண்டும். ரோடு முக்கில் ஒரு காலணியகம் இருக்கும். அதை ஒட்டின ரோடு. அதற்குள் நேராக உள்ளே வந்தால் இரண்டாவது லெஃப்ட். அங்கேயிருக்கிற ஒரு ஸ்கூலுக்கு எதிர் வீடு.

  ரொம்ப சுலபமாய் கண்டுபிடித்திருக்க வேண்டியது. ஆனால் இரண்டாவது லெஃப்டில் திரும்பி, பிறகு தேடியதில் அப்படி ஒரு ஸ்கூல் இருக்கிற சுவடே இல்லை. ஆகவே அந்தத் தெருவில் ஒரு கடையருகே பராக்குப் பார்த்தபடி நின்றிருந்த ஒருவரிடம் வண்டியை நிறுத்தி அங்கே ஒரு ஸ்கூல் இருக்கிறதா என்று விசாரித்தேன். ஏண்டா கேட்டோமென்று ஆகிவிட்டது. அவர் விஸ்கி போன்ற ஏதோ வாசத்துடன் லேசாய்த் தள்ளாடியபடி..

  ”எந்த ஸ்கூலு?”

  பள்ளியின் பெயரைச் சொன்னேன்.

  “அந்தப் பேர்ல ஒரு ஹோம் அப்றோம் ஒரு ஸ்கூல் ரெண்டுமே கீது.. நீ எங்கப் போணும்”

  ”ஸ்கூல்”

  ”ஸ்கூல் இங்க கடியாது. அது வேற எடத்துல கீதுபா. ஹோம்-ன்றது வேற. ஸ்கூல்ன்றது வேற. ஸ்கூல்-ல இன்னா வேல ஒனிக்கு?

  “ஸ்கூல்-ல எதும் வேலையில்ல. எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் புதுசா குடிவந்திருக்கார்.. அவர் வீட்ட தேடிட்டிருக்கேன்”

  “தின்னவேலிலேந்து வந்துக்கிறாரே அவுரா.. வாத்தியாரா?”

  “இல்ல. இந்த ஸ்ட்ரீட்-ல ஸ்கூல் இருக்கா இல்லியா?”

  “ஸ்கூலா? ஹோமா.. கரீட்டா சொல்லு.. அட்ரஸ் எதுனா வெச்சுனுருக்கியா?”

  “அட்ரஸ்லாம் இல்ல.. செகண்ட் லெஃப்ட்-ல ஸ்கூல்-க்கு எதுத்தா மாதிரின்னார்..”

  “த்தோடா… அட்ரஸ் இல்லேன்ற! எப்டி கண்டுபுடிப்ப? ஒனிக்கு எங்காப் போணும் சொல்லு.. அவரு முதலியாரா.. நாலு மாசத்துக்கு முன்னாடி வந்தாரு?”

  “இல்ல. இன்னிக்கு மத்தியானம்தான் வந்தார்.. செகண்ட் லெஃப்ட் இதான?..”

  “இத்தான்.. இன்னாபா ப்ரெண்ட்டூன்ற..ஃபோன் வெச்சிகிறாரா? வண்டிய ஆஃப் பண்ணுபா.. அவர் கைல போனப் போடு.. ந்தா.. ஓரமா நில்லு.. ஆட்டோ வர்து பாரு. இட்ச்சுறப்போவுது..”

  “அப்ப அந்த ஸ்கூல் இங்க இல்லயா..”

  “ஸ்கூல் மெயின் ரோட்டாண்ட கீது.. நீ அவரு கைல போன போட்டு அட்ரஸ் கேளுபா.. நான் சும்மாங்காட்டி சொன்னா அப்பால நீ இன்னிக்கு பூரா அலஞ்சுன்னேருப்ப. வோணுமா?!”

  இந்த ஆளிடம் கேட்டுக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்றுணர்ந்து நான் வண்டியை ஆஃப் பண்ணிவிட்டு போனை எடுத்து நம்பரை அழுத்தி நண்பரை விளித்தேன்..

  “த பாரு.. நான் தான் இந்த ஏரியா டி.வி கேபிள் கனெக்‌ஷனு … எங்க குடிவந்துக்குறாருன்னு கரீட்டா சொல்லு. வோணும்னா நான் வந்து வூட்ட காட்டுறேன். டி.வி வெச்சுக்கிறாரா?”

  “வீடு தெரியாமதான உங்ககிட்ட கேட்டுக்கிட்டிருக்கேன்..”

  “போன என்னாண்ட குடு… நான் தெளீவா கேட்டு சொல்றேன்.. நீ பாட்டுக்கு எதுனா கேட்டுகினுருக்காத.. அப்றம் இன்னோரு தபா நீ வேற எங்கணா பூடுவ”

  நண்பரிடம் போனில் பேசவிடாமல் சைடில் கூடவே விஸ்கி பேசிக்கொண்டிருந்தார். ‘அட குடுன்றன்ல.. இன்னா.. சொல்றது புர்ல?”

  கொஞ்சம் விட்டால் என் கையை முறுக்கி என் பிடரியில் ஒன்று போட்டுவிடுவாரோ என்று பயம் வந்தது.

  நான் அங்கிருந்து உடனே அகலுவதுதான் நல்லது என்கிற முடிவில் அவசரமாக நண்பரிடம் நான் இருக்குமிடத்தைச் சொல்லி எப்படி வரவேண்டுமென்று கேட்டேன். நண்பர் “ஸாரிங்க.. நீங்க வந்தது சரிதான். ஆனா செகண்ட் லெஃப்ட்- இல்ல லாஸ்ட் லெஃப்ட்.. அப்டியே திரும்பி மெயின் ரோட்லயே வாங்க.. கண்டு புடிச்சிரலாம்.” என்றார்.

  “இன்னாபா.. இன்னான்றாரு ப்ரண்டு… ஒனிக்கு ஸ்கூலுக்கு போணுமா.. ஹோமுக்கு போணுமா..”

  ’ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கற ப்ரெண்டோட ஹோமுக்கு’ என்று மனதில் நினைத்துக் கொண்டு “இல்லீங்க. அவர் கரெக்டா வழி சொல்லிட்டாரு.. நான் கண்டுபுடிச்சு போய்க்கிறேன்..”

  வண்டியைக் கிளப்பினேன். “இன்னாத்த கண்டுபுட்ச்ச.. ஒரு அட்ரஸ் சரியா வச்சுகினு வரமாட்ட? ந்தா.. நில்லுன்றன்ல?’

  “ரொம்ப தேங்க்ஸ்-ங்க நான் போய்க்கிறேன்..” நான் சட்டென்று தெருவில் U போட்டுக் கிளப்பினேன்.

  “இன்னாத்துக்கு தேங்க்ஸூ.. த.. பார்ரா தொர போய்க்கினேக்றாரு… நேரப் போயி லெஃப்ட்-ல.. அட.. நில்லுன்றேன்.. அந்த ஸ்கூலு.. த்*** டேய்ய்… அங்க போய் அலஞ்சுகினுருக்காத.. வண்ட்டான் பாரு… பேமானி.. அட்ரஸ் கேட்டுக்கினு…

  விஸ்கியின் குரல் தேய்ந்து மறைய நான் விரைந்து லாஸ்ட் லெஃப்ட்-டில் இருந்த ஸ்கூலுக்கு எதிர்புறம் இருந்த நண்பரின் வீட்டை சரியாக சென்றடைந்துவிட்டேன். அங்கே விஸ்கி சொன்ன ஸ்கூலும் ஹோமும் அடுத்தடுத்து இருந்தது.

  நண்பர் வீட்டில் அரைமணி நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு வந்த வழியிலேயே திரும்பும்போது, ரோட்டோரமாய் ஒரு ஆட்டோ நின்றிருக்க அதன் ட்ரைவர் ஆட்டோவுக்குள் உட்கார்ந்திருந்தவரிடம் சத்தமாய்க் பேசிக் கொண்டிருந்தார். “யோவ்..  சாவு கிராக்கி.. ஒனக்கு எங்கதான்யா போணும்? ஒழுங்கா சொல்லித் தொலை.. கய்தே.. அட்ரஸூ கேட்டா  தெரியாதுன்ற.. என்னோட ஆட்டோல ஏறி ஏய்யா உசுர வாங்கற? பேமானி…”

  திரும்பிப் பார்த்த போது ஆட்டோவினுள் மேலதிக போதையில் விஸ்கி சரிவாய்ப் படுத்திருந்தார்.

   
  • ஆயில்யன் 1:39 பிப on ஜூலை 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சரக்கு வுட்டுக்கிட்டு இது மாதிரி லந்து கொடுக்கறதுக்குன்னே நிறைய பார்ட்டீங்க இருக்கு போல 🙂 சரக்கு உள்ள போயிட்டாலே அவுங்களும் நல்லா உசரத்துக்கு போயி குந்திக்கினு வுடற அலம்பல் இருக்கே அவ்வ்வ்வ்வ் 🙂 பாவம் அந்த ஆட்டோ டிரைவரு லக்கேஜ் ஏத்திக்கிட்டு எங்க போய் திரிஞ்சுக்கிட்டிருக்காரோ ! :))

  • நண்பன் 10:50 பிப on ஜூலை 2, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இந்த பதிவோட நோக்கம் என்ன?

   • சித்ரன் 4:27 முப on ஜூலை 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

    இந்தப் பதிவின் நோக்கம் எனக்கேற்பட்ட அனுபவத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுதான்..

  • minimeens 4:30 முப on ஜூலை 3, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இது ரொம்ப அழகு…!

  • தாகன் 11:44 முப on ஜூலை 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இந்த ஜென்மத்தில் இனிமேல் வேற யார்கிட்டேயும் address கேக்க மாட்டிங்க!!!!!

  • செந்தில் 10:13 பிப on ஜூலை 8, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   சித்ரன்ஜி, முகவரி அறிந்திட மளிகை கடை அல்லது துணி தேய்ப்பவரை அனுகவும், இவ் இருவரும், அவர்களின் சுற்த்தாரை பெரும் அளவு அறிந்து வைத்திர்பார்கள்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி