Tagged: மொபைல் Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • மீனாட்சி சுந்தரம் 4:31 am on December 30, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: கடவுள், கண்டக்டர், பஸ், மொபைல்   

  கால் ஃப்ரம் கடவுள் 

  வேலை முடிந்து கிளம்பும் அந்த இரவு எட்டு மணியிலும் சென்னைக் கூட்டம் கொஞ்சமும் குறையாமல் இருந்தது பஸ்ஸில். டிக்கெட் வாங்க லேட்டாவதில், நெருப்பாய்க் கடுகடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர். இதில், மொபைலில் மனைவியின் அழைப்பு வேறு.லேசான காய்ச்சலில் தூங்கத் துவங்கிய அம்மாவை, துணைக்கு ஆளில்லாததால் விளையாட அழைத்துத் தொந்தரவு செய்து கொண்டிருந்தான் என் மூன்றரை வயது மகன் டேனி வீட்டில். அவனைச் சமாதானம் செய்யச் சொல்லி, என்னை ஃபோனில் அழைத்தாள் மனைவி.

  பேச ஆரம்பித்ததும் கண்டக்டர் கத்தினார்.

  “ஏம்பா… டிக்கெட்டை வாங்கிட்டுப் பேசேன். என்னதான் இருக்கோ அந்த ஃபோன்ல..? எங்க தாலிய அறுக்கறானுக..!”.

  பஸ்ஸில் எல்லோரும் திரும்பி என்னையே பார்க்க, மன்னிப்புக் கேட்டு டிக்கெட்டை வாங்கித் திரும்பும்போது டேனி கேட்டான்.

  “என்னப்பா… பஸ்ஸிலயா வர்ற..?”.

  நான் வர இருக்கும் ஆபத்து புரியாமல், “ஆமாடா..!” என்றதும், “யாரு விசில் அடிக்கறாங்க..?” என்று கேட்டான்.

  நான் “கண்டக்டர் மாமாடா…!” என்றதுதான் தாமதம், “ஃபோனைக் கண்டக்டர் மாமாகிட்டக் கொடு…!” என்று ஆரம்பித்துவிட்டான்.

  கண்டக்டரோ கொடூரக் கோபத்தில் எல்லோரையும் கத்திக் கொண்டிருந்தார்.

  என்ன செய்வது என்று யோசித்தபடியே, நானே கண்டக்டர் போல கொஞ்சம் மிமிக்ரி எல்லாம் பண்ணிப் பார்த்தேன். நம்ம ஃபெர்பாமென்ஸ் நாலு வயசுக் குழந்தையைக் கூட ஏமாற்றத் துப்பில்லை.

  கடைசியாய் டேனி கோபத்தில், “ஃபோனை கண்டக்டர் மாமாகிட்டக் குடுடா..!” என்றான். இனி மரியாதையில்லை.

  குழந்தையை மேலும் ஏமாற்ற மனதில்லாமல் நேராய்க் கண்டக்டரிடம் போய், “சார்.. என் பையன் உங்ககிட்டப் பேசணும்ங்கிறான். ஒரு ரெண்டு நிமிஷம் பேசிட்டுக் கொடுங்க சார்…ப்ளீஸ்..!”.

  ‘ஒருவேளை லூஸோ…!” என்று யோசித்தபடி நிமிர்ந்தவர், என் உடையைப் பார்த்துவிட்டு, “சின்னப் பையனா சார்..?” என்றபடி ஃபோனை வாங்கினார்.

  ஒரு மூன்று விநாடிகள்தான் இருக்கும். “ஆமாடா…”, “சாப்டுட்டேன். நீ சாப்டுட்டியா..?”, “ஆமா, அங்கிள்தான் விசிலடிச்சேன்..” என்றவர், அவன் கேட்டானோ என்னவோ மேலும் ஒருமுறை ஃபோனைக் கையில் வைத்துக் கொண்டே விசிலடித்தார். அப்புறம் கொஞ்சம் மகிழ்ச்சியாய் ஃபோனை என்னிடம் கொடுத்தவர், அடுத்து வந்தவர்களைக் கவனிக்க ஆரம்பித்தார்.

  நானோ எங்கே என் பையன், ‘டிரைவர் மாமாகிட்ட ஃபோனைக் கொடு..!’ என்று கேட்டுவிடுவானோ என்று பயந்து,”அப்பா… சீக்கிரம் வீட்டுக்கு வந்துடறேன்..!’ என்று வேகவேகமாய் ஃபோனைக் கட் செய்தேன்.

  அதன்பிறகு, முக்கால் மணி நேரம் என் ஸ்டாப் வரும்வரை கூட்டம் அப்படியே கொஞ்சமும் குறையாமல்தான் இருந்தது. ஆனால், அந்தக் கண்டக்டர் மிகுந்த சந்தோஷத்துடனே எல்லோரையும் நடத்திக் கொண்டு வந்தார்.

  எங்கோ முகம் தெரியாத ஒரு நபரின் மாலையை என் குழந்தை மகிழ்ச்சிகரமாக்கியது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாக இருந்தது.

  என் குழந்தை மட்டுமில்லை… எந்தக் குழந்தையானாலும் சொல்கிறேன்.

  கடவுளை விடவும் குழந்தைகள் மேலானவர்கள் தான். ஏனென்றால், கடவுள் சேற்றில் பூப்பூக்க வைத்தால், குழந்தைகளோ நெருப்பில் பூக்க வைத்துவிடுகிறார்களே..!

  ********

   

  டேனியின் உலகம் இங்கேயும் விரிகிறது:

   
 • சரசுராம் 6:55 pm on May 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: , அலைபேசி, கைப்பேசி, , செல், மொபைல், வாழ்க்கை, Cellphone   

  ‘செல்’ இல்லாத நாள் 

  மனிதன் உடம்பில் ’செல்’ இல்லாமல்கூட வாழ்ந்துவிடுவான் போலிருக்கிறது ஆனால் ’செல்போன்’ இல்லாமல் வாழவே முடியாது என்றாகிவிட்டது. அது கொஞ்ச நேரம் இல்லாவிட்டாலும் கை ஒடிந்தமாதிரி உணர ஆரம்பித்து விடுகிறார்கள். அதை எப்போதும் கையில் வைத்து அதை நோண்டிக் கொண்டேயிருப்பதும், அதை காதில் மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருப்பதும் ஒரு தீரா வியாதி மாதிரி ஆகிவிட்டது. செல்போன் ஒரு தவிர்க்க முடியாத விஞ்ஞான வளர்ச்சி என்றாலும் கோயில், திரையரங்கம், பேருந்துகள் என அதை பயன்படுத்தும் இடங்களும் காலங்களும் கொஞ்சம் எரிச்சலான விஷயமாகக்தான் மாறிவிட்டது.

  இயக்குனர் Feng Xiaogang –ன் சீனத்திரைப்படம் ‘Cell Phone” செல்போனின் தற்போதைய செயல் பாட்டை மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அதில் வரும் கதாநாயகன் அந்த செல்போனை வைத்துக் கொண்டு செய்யும் தில்லுமுல்லுகளை மிக நகைச்சுவையாக சொல்லியிருந்தார். அவன் தன் மனைவியிடமும், மனைவிக்கு தெரியாத தன் காதலியிடமும் அவன் செல்போன் மூலம் செய்யும் பித்தலாட்டங்களும், அவன் சொல்லும் அளவிலா பொய்களும் கொஞ்சம் மிகையாக இருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தன. கடைசியில் அந்த செல்போன் பொய்களால் அவன் அந்த இருவரையுமே  இழப்பதும், தன் அம்மாவின் சாவிற்கு செல்லும் அவன் அந்த சிதையில் தன் செல்போனை தூக்கி போட்டுவிட்டு கதறுவதாக படம் முடிகிறது. மிக சிறந்த படமாக இதை கருத முடியாவிட்டாலும் அந்த விவரிப்புகள் கவனிக்க வேண்டியவையாகத்தான் தோன்றியது.

  சமீபத்தில்  எங்கள் வீட்டில் அனைவருக்குமாக திருப்பதி போக தீர்மானித்தோம். அங்கே செல்போன் கொண்டு போனால் கோயிலுக்குள் அதற்கு அனுமதியில்லை என்றார்கள். அங்கே ஏதோவொரு வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். எதற்கு ரிஸ்க்? இதற்கு எதற்கு ஆயிரம் யோசனைகள்? செல்போன் இல்லாமல் வாழந்ததில்லையா? அப்படி ஒருநாள் இருந்துதான் பார்ப்போமே என அப்போதுதான் எனக்கு யோசனை வந்தது. என்னுடன் வந்தவர்களும் இதற்கு உடன்பட்டு செல்போன் எடுத்துக்கொள்ளவில்லை. அப்படியே எதாவது எமர்ஜென்ஸி என்றால் சில முக்கிய நம்பர்கள் என் ஞாபகத்தில் இருக்கிறது அது போதும் என்று நினைத்துக் கொண்டேன். திருப்பதியில் இறங்கினதுமே அந்த கை ஒடிந்த நிலையை அழுத்தமாகவே உணர ஆரம்பித்துவிட்டேன்.  என்னை மீறி என் கைகள் பாக்கெட்டில் செல்போனை தேடிப்போனது. ஒரு குடிகாரனின் சாய்ந்திரம் மாதிரி ஒரு பரபரப்பு என்னுள் தொற்றிக் கொண்டது. அதற்கு பிறகு கோயில். அதன் கூட்டம். அதன் பரபரப்பில் செல்போனை மறக்க ஆரம்பித்தேன். செல்போனை முழுவதுமாய் மறந்த நிலையில் தெளிவாய் சில விஷயங்களை என்னால் உணர முடிந்தது.

  1. காதுகளுக்கு அன்று நல்ல ஓய்வு கிடைத்தது. ஆனாலும் என் செல்போனின் ரிங்டோன் அவ்வவ்போது ஒலிப்பது போல் அமானுஷ்யமாக உணர்ந்தேன்.
  2. நம்பிக்கை பற்றியும், நட்பைப் போற்றியும், சினிமா நட்சத்திரங்களை பற்றிய கிண்டல்கள் போன்ற அபத்த குறுஞ்செய்திகளை  படிக்காதது அன்று ஆறுதலாக இருந்தது.
  3. தி.நகரில் இருந்துக் கொண்டு வடபழனியில் இருப்பதாக அன்று பொய்கள் சொல்லவில்லை.
  4. மிஸ்டு கால்களில் அன்பு செலுத்தும் தொந்தரவுகளுக்கு அன்று ஒருநாள் விடுமுறை.
  5. லோன் தருகிறேன் என்று அழைக்கும் அழகிய குரல்களின் வலைவிரிப்புகள் அன்று என்னிடம் நடக்கவில்லை.

  மொத்தத்தில் அன்று ஒரு நாள் மிக மிக அமைதியான தினமாகவே கழிந்தது. அப்படித்தானே நாம் வாழ்ந்திருக்கிறோம். தினமும் அப்படியே தொடர வாய்ப்பில்லை என்றாலும் அந்த முயற்சி அன்று வெற்றிகரமாகவே முடிந்தது. ஆனால், அடுத்தநாள் காலையில் என் நண்பருக்கு போன் பண்ணி திருப்பதிப் பயணத்தைப் பற்றி ஒரு பத்து நிமிடம் விவரித்த பிறகே என் பொழுது விடிந்தது.

  -சரசுராம்

   
  • ஜெயாகதிர் 11:40 பிப on மே 4, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இந்த செல்லானது கர்ணனின் கவச குண்டலம் மாதிரி உடம்போடு ஒட்டிவிட்டது. இனி பிரிப்பது கஷ்டம். நல்ல பதிவு சரசுராம்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி