Tagged: google Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

 • மீனாட்சி சுந்தரம் 10:10 am on August 31, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: கர்நாடகா, கிராமம், , , google, karnataka, village   

  கூகுள் கிராமம் 

  இன்டர்நெட் பற்றியே தெரியாத ஒரு கிராமத்தின் பெயர் “கூகுள்” என்றால் நம்பமுடிகிறதா…?

  கர்நாடகாவின் பெங்களுருவிலிருந்து 510 கிமீ தொலைவில், ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அது. கிருஷ்ணா நதிக்கரையில் முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள கிராமங்களில் இதுவும் ஒன்று. இதன் மக்கள் தொகை மொத்தமுமே சற்றேறக்குறைய 1000.

  அங்கிருக்கும் பெரியவர்களிடம் உலகின் முன்னணி இணையதள சேவை நிறுவனமான கூகுள் பற்றிச் சொன்னால், அது எங்கள் கிரமத்தின் பெயர் என்கிறார்களாம். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களோ,”எங்கள் கிராமத்தின் பெயரில் ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்…” என்கிறார்களாம். இதனால், எங்கள் கிராமத்துக்குப் பெருமை என்றும் ஒன்றிரண்டு பேர் சொல்கிறார்களாம். மற்றவர்களுக்கோ அதுகூடத் தெரியவில்லை.

  அமெரிக்காவின் கலிபோர்னியா ‘மவுண்டன் வியூ’வில் உள்ள கூகுள் இணையசேவை நிறுவனத்திற்குப் பெயர் வைக்க இந்த கிராமம் காரணம் அல்லவென்றாலும், இந்த கிராமத்திற்கு இப்பெயர் வர ஒரு புராணக் கதை இருக்கிறது.

  முன்னம் ஒரு காலத்தில், அல்லம்மா பிரபு என்னும் துறவி ‘பசவ கல்யாண்’ என்னும் இடத்திலிருந்து ஆந்திராவின் ‘ஸ்ரீசைலம்’ செல்லும் போது இந்த கிராமத்தில் தங்கியதால், அவர் தங்கிய குகையை ‘காவி கல்லு’ என்று அழைத்திருக்கிறார்கள். நாளடைவில் அது மருவி கூகல்லு ஆகி, இப்போது ஸ்டைலாக இன்னும் சுருங்கி கூகுள் ஆகிவிட்டதாம்.

  இணைய இணைப்புகள்தான் இல்லை என்றால், கிராமத்தில் எங்கும் ஆங்கிலத்தில்கூட ‘கூகுள்’ இல்லையாம். ஆங்கிலம் கூடாது என மக்கள் போராடியதால், எல்லாப் பெயர்ப் பலகைகளிலும் கன்னடத்தில் மட்டுமே கூகுள் இருப்பதால்… கூகுள் முதலாளியே வந்தால்கூட தனது கம்பெனிப் பெயரை அடையாளம் கண்டுகொள்ளமுடியுமா என்பது சந்தேகமே.

   
  • கார்த்திக் 10:18 முப on ஓகஸ்ட் 31, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   /// கூகுள் முதலாளியே வந்தால்கூட தனது கம்பெனிப் பெயரை அடையாளம் கண்டுகொள்ளமுடியுமா என்பது சந்தேகமே ///

   :)))

   தெரிஞ்சா, முதலாளி அந்த கிராமத்துக்கு பல மில்லியன் டாலர்கள் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • C.S.சந்திரசேகர் 9:33 முப on செப்ரெம்பர் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   இந்த விஷயத்த Google’ ல தேடி புடிச்சீங்களா?

   • மீனாட்சிசுந்தரம் 9:36 முப on செப்ரெம்பர் 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

    இல்லை… கர்னாடகாவுல இருக்கையில ஒரு பேப்பர்ல படிச்சேன் சேகர்.

  • காஞ்சி ரகுராம் 11:35 பிப on செப்ரெம்பர் 1, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

   கூகுளாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா என நம் வாழ்க்கை ஆகி விட்டதால், ஒரு முறையேனும் அந்த கிராமத்திற்க்குச் செல்ல ஆசையாக இருக்கிறது.

  • chollukireen 4:43 முப on நவம்பர் 21, 2011 நிரந்தர பந்தம் | மறுமொழி

   கூகிளுக்கும் அர்த்தம் சொல்லுகிறது.

 • சத்யராஜ்குமார் 10:27 am on March 6, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: google, , Tips   

  கூகிள் தேடலும், உங்கள் வலைப்பதிவும். 

  சமீபத்தில் கூகிள் வழங்கிகளில் வேலை செய்ய நேர்ந்தது. அப்போது கிடைத்த சில்லறை ஞானங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டால் நம் வலைப்பதிவர்களுக்கு உபயோகப்படுமே என்று தோன்றியது.

  முன் எப்போதையும் விட இப்போது இணையத்தில் தமிழ் பக்கங்களை நிர்வகிப்போர் மிக அதிகமாய் உள்ளனர். பலருக்கும் <a>, <b> போன்ற HTML tags இந்நேரம் அத்துபடியாகியிருக்கும். நீங்கள் பதிவை வெளியிட்ட பின் தேடுபொறிகள் அவற்றை தேடி எடுத்துக் கொள்வதையும் அறிவீர்கள். அப்படி தேடி எடுத்துக் கொள்ள keywords என்ற meta tag உபயோகப்பட்டு வந்ததையும் அறிவீர்கள். உதாரணமாக:

  <META NAME=”keywords” CONTENT=”நித்யானந்தா, சுவாமிகள், வீடியோ”>
  என்று உங்கள் வலைப்பக்கத்தின் <head>-க்கு நடுவே சேர்த்து விடுவது.

  மேற்படி மெட்டா கட்டளையை காலம் காலமாக தேடுபொறிகள் உபயோகித்து வந்தன. ஆனால் என்னைப் பற்றி நானே நான் ரொம்ப நல்லவன்ங்க என்று சொல்லிக் கொள்ளும்படி இருப்பதால் கூகிள் இதை மதிப்பதில்லை. எதை எழுதினாலும் அப்போதைக்கு பிரபலமாயிருக்கும் குறிச்சொற்களை போட்டு விட்டால் தங்கள் பக்கத்தை தேடலில் முன்னால் கொண்டு வரலாம் என்று இந்த யுக்தியை பலரும் குயுக்தியாய் மாற்றி விட்டதே காரணம்.

  நித்யானந்தாவின் படுக்கையறைக்குள் அத்து மீறி நுழைந்து விடியோ எடுத்து உலகுக்கு காட்டிய சன் டிவி போல கூகிள் உங்கள் வலைமனைக்குள் தானாகவே நுழைந்து எல்லாமே எடுத்துக் கொள்ளும் என எண்ணிக் கொள்ள வேண்டாம். அது உங்கள் ப்ரைவசியை நிச்சயம் மதிக்கிறது.

  உங்கள் தளத்தில் கூகிள் என்னவெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும், எதையெல்லாம் தேடல் முடிவுகளில் காட்ட வேண்டும் அல்லது காட்டக் கூடாது என்று கூகிள் தேடுபொறிக்கு உங்கள் பதிவிலேயே கட்டளை தர முடியும்.

  அப்படியே அது ஒரு பதிவை எடுத்துக் கொள்ள அனுமதித்தாலும், தன் வழங்கியில் அது ஆண்டாண்டு காலத்துக்கும் cache ஆக சேமித்து வைத்துக் கொள்ளலாமா, கூடாதா என்று கூட நீங்கள் வரையறுக்க முடியும். எப்படி? ஓரிரு எளிய robots கட்டளைகளையும், கூகிள் ஸ்விட்சுகளையும் உங்கள் பதிவில் இடுவதன் மூலம் அது சாத்தியமாகும்.

  இந்தப் பதிவை தொடாதே:

  <META NAME=”robots” CONTENT=”noindex”>

  என் பதிவை திரட்டிக் கொள், ஆனால் என் பதிவில் உள்ள தொடுப்புகளுக்குப் போகாதே.

  <META NAME=”robots” CONTENT=”nofollow”>

  என் பதிவை திரட்டு, ஆனால் உன் வழங்கியில் cache ஆக சேமித்து வைக்காதே.

  <META NAME=”robots” CONTENT=”noarchive”>

  உங்கள் பக்கம் கூகிளால் திரட்டப்பட்டாலும் அவற்றில் சில பகுதிகளை தேடல் முடிவுகளில் காட்டாதிருக்க உதவுபவை கீழ்கண்ட கூகிள் சுவிட்சுகள்.

  மின்னஞ்சல் தேடல் முடிவுகளில் இடம் பெறாதிருக்க:

  <!–googleoff: all–>என் மின்னஞ்சல் முகவரி naan@enserver.com
  <!–googleon: all–>என் கட்டுரையின் இப்பகுதி தேடல் முடிவுகளில் இடம் பெறலாம்.

  ரஞ்சிதா என்ற சொல்லோடு nithyaanandhaa.html பக்கம் தொடர்பு படுத்தப்படாது. ஆனால் நித்யானந்தா என்று தேடினால் fraud.html காண்பிக்கப்படும்.

  <!–googleoff: anchor–><A href=”nithyaanandhaa.html”>
  ரஞ்சிதா </A>
  <!–googleon: anchor–>
  <A href=”fraud.html”>
  நித்யானந்தா </A>

  ரஜினி என்று தேடினால் இந்தப் பக்கத்தை காட்டாதே. அஜீத் என்று தேடுவோருக்கு மட்டும் காட்டினால் போதும்.

  <!–googleon: index–>அஜீத் பேச்சுக்கு கை தட்டினார் <!–googleoff: index–>ரஜினி
  <!–googleon: index–>அதை கலைஞர் ரசித்தாரா?

  உங்கள் கட்டுரையை யாராவது தேடிப் பிடிக்கும்போது, கூகிள் உங்கள் கட்டுரையில் நீங்கள் கண்டித்து மேற்கோள் காட்டியுள்ள கெட்ட வார்த்தைகளை உங்கள் தொடுப்புக்குக் கீழ் காட்டாதிருக்க:

  <!–googleoff: snippet–>உங்கள் கட்டுரைக்கு நடுவே சாரு சமீபத்தில் எழுதிய கெட்ட வார்த்தை கட்டுரையின் மேற்கோள்.
  <!–googleon: snippet–>உங்கள் கட்டுரையின் வாசகங்கள்.

  வாழ்க கூகிளானந்தா!

   
 • சித்ரன் ரகுநாத் 8:03 am on September 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி
  Tags: இணையம், , google, , wikipedia   

  தடுக்கிப்பீடியா 

  Google T-shirt

  Google T-shirt

  முதலிலெல்லாம் எந்தச் சமாச்சாரத்தைத் தேடவேண்டுமென்றாலும் இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பாமல் நேராக கூகிளுக்கு போய் தட்டிவிடவேண்டியதுதான். கோடிக்கணக்கில் இறைந்து கிடக்கும் வலைப்பக்கங்களிலிருந்து நீ கேட்டது இதுதானா பார் என்று பொறுக்கியெடுத்து ஒரு கை அள்ளிக் கொணர்ந்து கூகுள் கொடுக்கும் பிரசாதத்தில் நமக்குத் தேவைப்படுகிற முந்திரிப்பருப்பு நிச்சயம் ஒன்றிரண்டாவது கிடைத்துவிடும்.

  இவ்வாறாக இட்லி, வடை என்று எதைத் தேடுவதென்றாலும் கூகிள் கை கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. வேறு எந்த தேடலியந்திரமும் கிட்டே நெருங்க முடியாத அளவு வளர்ச்சியடைந்து இப்போது நெ.1 என்று ஆகிவிட்டது. Search Engine என்ற வகையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு engine பிடிக்கலாம். சிலருக்கு யாஹூ, சிலருக்கு பிங்கு (Bing). எனக்கு கூகுள் சொந்த மாமா பையன் என்பது மாதிரி உறவாகிவிட்டது.

  “Sometimes when I am alone I google myself” என்கிற வாசகத்தைத் தாங்கிய ஒரு சிவப்பு பனியனை கடையில் பார்த்தவுடனே பிடித்துப் போய், விருப்பமான உடையாய் அவ்வப்போது ரொம்ப நாளைக்கு அணிந்திருந்தேன். மேலும் என்னுடைய google talk ஸ்டேடஸ் செய்தியாக இதையே சில நாள் போட்டு வைத்திருந்தேன். ‘சில நேரம் நான் தனியாக இருக்கும் போது என்னை நானே தேடிப்பார்க்கிறேன்’ என்று அதை அர்த்தப்படித்தி வைத்திருந்தேன். தெருவில், ரயிலில், அலுவலகத்தில் என்று எதிரே வருகிறவர்களின் பார்வை என் பனியன் வாசகத்தின் மேல் படிவதை லேசாக நான் ரசிக்காமலில்லை. இதன் மூலம் நான் வாழ்வாதாரத்துக்கான உத்யோகமாய் கம்ப்யூட்டரைக் கட்டிக்கொண்டு அழுகிறேன் என்பதை எல்லோருக்கும் பிரஸ்தாபித்துவிடுகிற ஒரு தற்பெருமை. என் பனியனைப் படிக்கிற இணையம் பற்றி அறியாதவர்கள் “இன்னாதிது கூகுள்னா?” என்று புருவம் உயர்த்தவும் வாய்ப்புண்டு. Google Talk chat-ல் வந்த ’விவகாரம்’ பிடித்த நண்பரொருவர் வேண்டுமென்றே “ஒரு சின்ன சந்தேகம். google-ன்னா கெட்ட வார்த்தையா?” என்று கேட்க திடுக்கிட்டு உடனே ஸ்டேட்டஸ் செய்தியை மாற்றிவிட்டேன்.

  ஆனால் இப்போதெல்லாம் கூகிளில் எதைத் தேடினாலும் முதல் பக்கத்தில் ஒரு நான்கைந்து ஸர்ச் ரிசல்டுக்குள்ளாகவே ஒரு விக்கிப்பீடியா பக்கத்திலும் நாம் தேடுவது இருக்கிறது என்று கூகிள் காட்ட ஆரம்பித்தது. இது அடிக்கடி தொடரவே மாமா பையனுக்கு எதற்கு சிரமம் கொடுப்பானேன் என்று நேராக விக்கிப் பீடியாவுக்கே போக ஆரம்பித்துவிட்டேன். விக்கிக் பீடியா கிட்டத்தட்ட ஒரு அட்சய பாத்திரமாக ஆகிவிட்டது. எதைக்கேட்டாலும் பரமாத்மா மாதிரி எடுத்துக் கொடுக்கிறது. ஏதாவது ஒன்றைத் தேடப்போனால் தேடியது தவிர அது சம்பந்தப்பட்ட குறிச்சொற்கள் அந்தந்தப் பக்கங்களில் கொட்டிக்கிடப்பதால் அதைக் கிளிக்கி இதைக் கிளிக்கி ஒரு பத்து நிமிடத்தில் விக்கிப் பீடியா என்கிற அடர்ந்த கானகத்தே தொலைந்து போய் காணாமல் போய் விட நேரிடும். ஏதோ ஒரு சில பக்கங்களில் விளையாட்டுப் போல விக்கியை ஆரம்பித்து இப்போது அதை எல்லையில்லா என்சைக்ளொப்பீடியாவாக மாற்றிய மிகப் பெரிய மூளைக்காரர்களுக்கு இந்தப் பொன்னான வேளையில் சிரம் தாழ்த்தி கண்ணம்மாபேட்டை இணைய இளைஞர் மனமகிழ் மன்றம் சார்பாக இந்தக் கதராடையை பொன்னாடையாக அணிவித்து …

  இப்போது போய்ப் பார்த்தால் நான் எழுதிய வலைப்பதிவுகளில் இடையிடையே சொல்லப்படும் விஷயங்களுக்கான இணைப்புப் பக்கமாய் விக்கிப்பீடியாவின் சுட்டிகள்தான் அதிகம் இருக்கின்றன. இட்லி என்று தேடினால் அதற்கொரு பக்கம், ரவா தோசைக்கு ஒரு பக்கம். இது மாதிரி மைலாப்பூர், சைதாப்பேட்டை, கருணாநிதி, விஜயகாந்த் என்று எதைத் தேடினாலும் அதற்கு ஒரு பக்கம் இருக்கிறது. ஆக விக்கிப்பீடியாவானது “நம்மாளு” என்கிற மாதிரி ரொம்பவும் நெருக்கமாகிவிட்டது.

  ஒருதடவை மருந்துக் கடையில் வாங்கி வந்த ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்தின் பட்டையில் அதன் பெயர் இல்லாததால் அதனுடைய chemical name-ஐ வைத்து விக்கிப்பீடியாவில் தேடி இன்னதுக்குத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணமடைந்தேன். பையனுக்கு ஸ்கூலில் கொடுக்கப்படும் ஹோம் ஒர்க்குகளுக்குக்கூட (நாமதாங்க பண்ணனும்) பெரும்பாலும் இப்போதெல்லாம் விக்கிப்பீடியாவையே பெருமளவில் நம்பியிருக்கவேண்டியிருக்கிறது. ஆனால் விக்கிப்பீடியாவின் பக்கங்களில் பொதிந்திருக்கும் விஷயங்களின் நம்பகத்தன்மைக்கு “ப்ரீத்தி மிக்ஸி” அளவுக்கு கியாரண்டி இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். ஆனால் 2 மார்க் ஸ்கூல் வினாக்களுக்கு சில தகவல்கள் எதேஷ்டம்.

  நேற்று ஒரு ஹோம் ஒர்க்குக்காக இந்தியாவில் Deciduous காடுகள் எங்கெல்லாம் இருக்கின்றதென்று தேடிக்கொண்டிருந்தேன். அருகில் வந்து நின்ற மனைவி மானிட்டரை கண்ணுற்றுவிட்டு “தடுக்கி விழுந்தா விக்கிப்பீடியாலதான் போய் விழுகறீங்க போல” என்று சொன்னதால் இப்படியொரு தலைப்பில் இப்படியொரு பதிவு.

  -சித்ரன்

   
  • ila 9:48 முப on செப்ரெம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   🙂

  • Periyasamy 10:06 முப on செப்ரெம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நானெல்லாம் தினமும் Wikipedia’s இரண்டு கட்டுரையாவது படிக்க நேர்ந்துவிடுகிறது.

   ஆனால் அனைத்துத் தகவல்களையும் அப்படியே நம்பி விட முடியாதுதான்.

  • சத்யராஜ்குமார் 3:01 பிப on செப்ரெம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   பீடிப்பதுன்னு சொல்றாங்களே அந்த பீடியா? 😐

  • REKHA RAGHAVAN 10:23 முப on செப்ரெம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   // சத்யராஜ்குமார்/
   பீடிப்பதுன்னு சொல்றாங்களே அந்த பீடியா?

   பிடிப்பது தானே சரி SRK?

   @@ -சித்ரன்

   நல்ல பதிவு. தலைப்பு படு ஜோர்.
   ரேகா ராகவன்

  • சத்யராஜ்குமார் 11:23 முப on செப்ரெம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   @REKHA RAGHAVAN:

   //பிடிப்பது தானே சரி SRK?//

   பீடிப்பது என்ற சொல் வேறு. பொதுவாக நோய்கள் பீடிப்பதாக சொல்வார்கள்.

  • சித்ரன் 12:54 பிப on செப்ரெம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   நன்றி இளா, பெரியசாமி, சத்யராஜ்குமார், ரேகா ராகவன்.

   @பெரியசாமி: வி.பீடியாவை ஓரளவுதான் நம்பலாம்.
   @சத்யராஜ்குமார் @ரேகா ராகவன்: நான் விக்கிபீடியா நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூட சொல்லலாம். அடுத்த டெக்னாலஜி வரும் வரைதான். அப்புறம் சரியாகிவிடும்.

  • Prakash 4:30 முப on செப்ரெம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

   //அதனுடைய chemical name-ஐ வைத்து விக்கிப்பீடியாவில் தேடி இன்னதுக்குத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணமடைந்தேன்.//

   இது தவறான பழக்கம். இனிமே செய்யாதீங்க.

   • சித்ரன் 4:54 முப on செப்ரெம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் | மறுமொழி

    நன்றி பிரகாஷ். நான் வி.பீடியாவில் சரிபார்த்துக் கொண்டது டாக்டர் எழுதிக்கொடுத்த பிரிஸ்கிரிப்ஷன் மருந்துதான். சந்தேகமும் ஆர்வக்கோளாறும் கலந்த ஒரு நிலையில் அதை செய்யவேண்டியிருந்தது. இந்த மாதிரி அவசர நேரத்தில் சிலசமயம் நமக்கு நாமே டாக்டராகியும் விடுகிறோம். முடிந்தவரை இதைத் தவிர்க்க வேண்டும்.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி