க்யூப்ரிக்ஸ் கோல்ட் கலோரிக் டெஸ்ட் 

இன்று நண்பர் ஒருவரின் புலம்பலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் எந்தப் பிரச்சனைக்காக எப்போது எந்த டாக்டரிடம் போனாலும் தவறாமல் இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், MRI ஸ்கேன் என்று எதையாவது ஒன்றை மேற்கொள்ளச் சொல்லி எழுதித் தருகிறார்கள். எல்லா டாக்டர்களுக்கும் இம்மாதிரியான லேப் மற்றும் ஸ்கேன் சென்டர்களுடன் ஒப்பந்தம் உள்ளது என்பதே அவர் அங்கலாய்ப்பின் மையக் கரு. டெஸ்ட் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு எல்லாம் சரியாகவே வேலை செய்கிறது. கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கடைசியில் சொல்லிவிடுகிறார்களாம். அதுதான் நமக்கே தெரியுமே. இப்படிப் போய் அப்படி வருவதற்குள் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயாவது பழுத்துவிடுகிறது என்றார். உண்மையான கவலைதான்.

இந்தப் புலம்பலைக் கேட்டபோது ஏழெட்டு வருடங்களுக்கு முன் எனக்கொரு பிரச்சனை ஏற்பட்டு இதுமாதிரி ஒரு சில சோதனைகளைக் கடந்த ஞாபகம் தலை தூக்கியது. அப்போது எனக்கு அடிக்கடி முன் அறிவிப்பில்லாமல் தலை சுற்றல் நிகழும். அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பேன். திடீரென்று அறை சுழல்வது போல் தோன்றும். நான் மட்டும் நிலையாய் உட்கார்ந்திருக்க அறையில் இருக்கிற பொருட்களும், மேசை நாற்காலிகளும் ஏதோ ஒரு திசையில் நகர ஆரம்பிப்பதுபோல பிரமை ஏற்படும்.  பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதை நான் மட்டும் உணர்வதுபோல் இருக்கும். இந்த சுற்றலின் விளைவாக உடலில் – குறிப்பாக உடலுக்குள் இருக்கும் வயிற்றில் – ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டு, ஒரு குமட்டல் மேல் நோக்கிப் புறப்படும். பிறகு செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டுவிட்டு தள்ளாடியபடி வாஷ்பேசினை நோக்கி உடனடியாக விரையவேண்டியிருக்கும். வயிற்றுக்குள் இருக்கும் பகுதிகள் வெளியே வந்து விழுவதுபோல தொடர்ந்து தீவிர வாந்தியவாதியாக கொஞ்ச நேரம் இருக்க நேரிடும். சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும்.

இது போல மாதத்திற்கு ஒரு முறை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு தடவை சலூனில் முடி திருத்தம் செய்துகொண்டிருந்தபோது இப்படி நேர்ந்து பாதியிலேயே எழுந்து வெளியே வந்து ஆட்டோ பிடித்து நான்கு பில்டிங் தள்ளியிருக்கிற என் வீட்டில் இறங்கி பாக்கெட்டில் அகப்பட்டதை ட்ரைவரின் கையில் திணித்து வாஷ்பேசினை நோக்கி ஓடினேன்.

இதை இப்படியே விட்டுவிட்டால் சரியாகாது என்று வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கேஸ்ட்ரோஎண்ட்ராலஜிஸ்ட் டாக்டரை அணுகினேன். பிரச்சனையைக் கேட்டுவிட்டு ஒரு சில பரிசோதனைகளைச் செய்யவேண்டுமென்றார். நான் என் உடம்புக்குள்ளிருந்து ரத்தம் முதலான திரவப் பொருட்களை சாம்பிள் கொடுத்துவிட்டு அடுத்த நாள் அவரைப் பார்க்கப் போனேன். எல்லாம் சரியாகவே இருப்பதாக அறிவித்தார். பிறகு கொஞ்சம் கூட யோசிக்காமல் பக்கத்திலேயே ஒரு காது மூக்கு தொண்டை நிபுணர் இருப்பதாகவும் அவர் எனக்கு “க்யூப்ரிக் கோல்டு கலோரிக் டெஸ்ட்- என்று ஒன்றைச் செய்வார் என்றும் அறிவித்தார். கேட்பதற்கே கவர்ச்சிகரமாக இருக்கும் இந்தப் பரிசோதனை எதற்கு என்று கேட்டபோது அவர் சொன்னது: நாம் நிற்கும் போதும் நடக்கும்போதும் உடம்பை பேலன்ஸ் செய்வது நம் காதுகள்தாம். காதுக்குள் இன்ஃபெக்ஷன் ஆகி பேலன்ஸ் தவறினால் இது போல தலைசுற்றலோ, நடக்கும்போது தள்ளாடலோ ஏற்படும் என்றார்.

இந்த க்ளினிக்-லிருந்து இரண்டு வீடுகள் தள்ளி  அந்த இளம் கா.மூ.தொ நிபுணரின் க்ளினிக் இருந்தது. அவரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு ரிஷப்ஷனில் உட்கார்ந்து சுவரில் “For Sale” என்று எழுதி மாட்டியிருந்த அவர் மனைவியின் தஞ்சாவூர் பெயிண்டிங்குகளை பார்த்தவாறே டாக்டர் செய்யப்போவது எந்த மாதிரியான டெஸ்ட் என்பதை யோசித்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு யோசித்தும் கிஞ்சித்தும் பிடிபடவில்லை. பிறகு நான் அந்த டாக்டரை சந்தித்தபோது என்னை அடுத்தநாள் காலை எட்டுமணிக்கு வயிற்றைக் காலியாக வைத்துக்கொண்டு  வரச்சொன்னார்.

போனேன். இளம் நர்ஸ்கள் சகிதம் வந்த டாக்டர் என்னை அறை நடுவாந்திரம் இருந்த ஒரு படுக்கையில் ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுக்கச் சொன்னார்.  பிறகு ஒரு பெரிய சிரிஞ்சை எடுத்தார். நர்ஸ்கள் ஒரு மினி குளிர்சாதனப் பெட்டியிலிருந்து சில ஐஸ்கட்டிகளை எடுத்து ஒரு ட்ரேயில் வைத்தார்கள். பனிக்கட்டி உருகி உருவாகிய நீரை சிரிஞ்சால் உறிஞ்சினார். பின்னர் கொஞ்சம் பொறுத்துக்கங்க என்று சொல்லிவிட்டு எனது வலது காதுக்குள் சிரிஞ்சை வைத்து பீய்ச்சினார். சிலீர் என்ற பனி நீர் காது ஜவ்வை முத்தமிட உடம்பு முழுக்க ஓடியது ஒரு மின்சாரச் சிலிர்ப்பு. உடலின் ஒவ்வொரு அணுவும் ஜில்லென்று கூச, அந்த உணர்வை எப்படிச் சொல்வது? “உச்ச மகிழ்வுக்கும் உச்ச வலிக்கும் அனுபவிப்பவனிடம் அடைமொழி இல்லை. மேலும் எம் வலி ஆகாது உம் வலி” என்று கல்யாண்ஜியின் கவிதை வரிகளை இந்த உணர்வுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

இப்போது லேசான தலை சுற்றல் ஏற்பட்டு அறை மெதுவாகச் சுழல ஆரம்பிக்கும். டாக்டர் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார். தலை சுற்றுகிறதா? எந்தத் திசையில் சுற்றுகிறது என்று கேட்பார். சரியாக இரண்டு நிமிடம் கழித்து தலை சுற்றுவது நிற்கும்.  டாக்டர் ஒரு தாளில் எதையோ குறித்துக் கொள்வார். பிறகு ஐந்து நிமிடம் எனக்கும் அவருக்கும், செவிலிகளுக்கும் ஓய்வு. பின்னர் எதிர் திசையில் ஒருக்களித்துப் படுக்கச் சொல்லிவிட்டு மீண்டும் சிரிஞ்ச், குளிர் நீர் உறிஞ்சல், இடது காதுக்குள் பீய்ச்சல். இப்போதும் தலை சுற்றல் ஏற்படும். ஆனால் முன்னர் ஏற்பட்டதற்கு எதிர் திசையில். சரியாக இரண்டு நிமிடம். பின்னர் நின்றுவிடும்.

இரண்டு வெவ்வேறு திசைகளிலான, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தலைசுற்றல்களினால் தள்ளாடி இருக்கையில் அமர்ந்த என்னிடம் “பேலன்ஸ் சரியாத்தான் இருக்கு. எதுவும் ப்ராப்ளம் இல்லை” என்றார் டாக்டர். நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். இதுதான் க்யூப்ரிக்ஸ் கோல்ட் கலோரிக் டெஸ்ட்.

கேஸ்ட்ரோ எண்டராலஜிஸ்ட் டாக்டரின் பிள்ளைதான் இந்த இளம் காது மூக்கு தொண்டை டாக்டர் என்று பின்னர் தெரிந்தது. அதன்பிறகு எனக்கும் அந்த பிரச்சனை சட்டென்று நின்றுவிட்டது.