Updates from மே, 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • கனகராஜன் 9:03 am on May 21, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    இறந்த இலக்கியங்களும், மறைந்த ஜனரஞ்சகங்களும் 

    மதியம் டீ சாப்பிட நண்பருடன் கடைக்குச் சென்றிருந்தேன். தினத்தந்தியைப் பிரித்தபோது எழுத்தாளர் அனுராதாரமணன் அவர்களின் மரணச் ‍செய்தியைப் படிக்க நேர்ந்தது. சட்டென்று அதிர்ச்சி.

    “அடப்பாவமே… அனுராதாரமணன் இறந்துட்டாங்களா?” என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட்டேன்.

    நண்பர் ‘அனுராதாரமணன் யார்?’ என்று கேட்டார். அவரைப் பற்றி சொல்ல வேண்டியதாயிற்று.
    அவரிடம் விடைபெற்று வந்த பின்னால் அனுராதாரமணன் பற்றிய யோசனைகள். ஜனரஞ்சக இதழ்களில் வெகு காலம் எழுதிப் பிரபலமான ஒரு எழுத்தாளரை யார் என்று விளக்க வேண்டிய சூழ்நிலையில் இன்னும் வாசிப்பு விவகாரம் மந்தமாக உள்ளது. இந்த லட்சணத்தில் இலக்கியக் குப்பை கொட்டி என்ன பயன் என்று ஆயாசமும் எழுகிறது.

    ஒன்பதாவதோ பத்தாம் வகுப்போ படிக்கிற போது அனுராதாரமணன் கதைகளைப் படிக்க நேர்ந்தது. லட்சுமி கதைகளுக்கும் அனுராதாரமணன் கதைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணரமுடிந்தது. அவர் எழுத்துக்களில் ஜனரஞ்சகத் தன்மை இருந்தாலும் அதையும் மீறிய ஒரு தைரியம் இருந்தது. ஜெயகாந்தன், ஜானகிராமன் பாதிப்பு அவர் கதைகளில் இருந்தது. ஓவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் எழுத்துகில் எதிர்பாராமல் நுழைய நேர்ந்த கதையை பாக்கெட் நாவல் மூலமாக ‍தெரியவந்தது. அவரின் குடும்ப சூழ்நிலை. இரண்டு பெண் குழந்தைகளுக்கு பொறுப்பான, சுதந்திரமான தாயாக… அவரின் பேட்டிகள் மூலமாக, வாழ்க்கைக் குறிப்புகள் மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. ஒரு கட்டத்தில் தமிழில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர் என்கிற குறிப்பையும் படித்த நினைவு வந்தது.

    சுபமங்களா இதழுக்கு ஆரம்பத்தில் அவர்தான் ஆசிரியர். அது ஒரு ஜனரஞ்சக இதழாக இருந்தாலும் பல நல்ல படைப்பாளிகளின் படைப்புகளையும் வெளியிட்டு வந்தார். பின்னாளில் அது கோமல்சுவாமிநாதனின் இலக்கிய இதழாக மாறியது. அப்போது பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு இலக்கிய கூட்டத்தில் ஒருவர் அனுராதாரமணனின் சுபமங்களா பற்றி கடுமையான விமர்சனம் செய்தார். ஆனால் அந்த அளவுக்கு அது மோசமான இதழ் இல்லை. கூட்டம் முடிந்தபின் இதைப் பற்றி அவரிடம் ‍கேட்டபோது, தான் அனுராதாரமணன் சுபமங்களா பார்த்ததில்லை என்றார். ஆனால் அது அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தாராம்.

    அனுராதாரமணன் சுபமங்களாவில் பிரபஞ்சன், அசோமித்திரன், லா.சா.ரா, திலகவதி, வாஸந்தி, ம.வே.சிவக்குமார், செ.யோகநாதன், சுப்ரபாரதிமணியன்… என்று பல படைப்பாளிகள் பங்கு பெற்றிருந்தார்கள்.

    சுபமங்களாவுக்குப் பின் வளையோசை நடத்தினர். இது இரண்டோ மூன்றோ இதழ்கள்தாம் வந்தன. சுபமங்களாவுக்கு முன் அவர் வேறு இதழ்களுக்கும் ஆசிரியரா இருந்திருக்கிறார் என்று அறிகிறேன். அவர் ஆசிரியராக இருந்த பழைய வளையோசை ஒன்று மாத நாவலாக பார்த்திருக்கிறேன்.

    இடையில் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினை ஒன்றை சந்தித்தபோது அரசியல்-பல்வேறு பயமுறுத்தல்களும் எழுந்தபோது தைரியமாக எதிர்த்து உறுதியோடு இருந்தார். அவரது விதைகள் என்கிற தொகுப்பு (2 பாகங்கள்) அவரது எழுத்துலக அனுபவங்களை வெளிக்காட்டியிருந்தது. அன்புடன் அனுராதாரமணன் தொடர் மூலம் நல்ல தீர்வுகளையும் மன ஆறுதல்களையும் அவர் பலருக்குத் தந்திருக்கிறார்.

    அவர் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்பதால் இலக்கியப் இதழ்கள் அவர் மறைவைப் பற்றியான செய்திகளை எப்படி வெளியிடும் என்று தெரியவில்லை. அவரின் வாழ்க்கைக் குறிப்பை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த தலைமுறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் எழுத்தாளர்களைப் பற்றி எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வெளிநாட்டு படைபபாளிகளின் பெயர்களால் நம்மைத் திணற அடித்து பயமுறுத்துகிறார்கள். நகுலனின் மறைவுக்குப் பின்னால்தான் அப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்று அறிந்து கொண்ட படைப்பாளிகள் எங்கள் ஊரில் இருக்கிறார்கள்.

    சில மாதங்களுக்கு முன்னால் எழுத்தாளர் செ.யோகநாதன் மறைவை இணையத்தின் மூலம்தான் அறிந்து கொள்ள முடிந்தது. எங்கள் ஊரில் இருக்கும் இரண்டு பின்நவீனத்துவப் படைப்பாளிகளைச் சந்தித்தபோது இந்தத் தகவலைச் சொன்னேன். “யாரு அவரு? எதில எழுதியிருக்காரு?” என்று கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. அதே தகவலை வளர்ந்த ஒரு மூத்த இலக்கியவாதியிடம் சொன்னபோது. “அவரு கமர்ஷியல் ரைட்டர்தானே…” என்றார் சாதாரணமாக. இலக்கிய இதழ்கள் பலவற்றில் எழுதிய செ.யோகநாதன் எந்த மாதிரியான எழுத்தாளர் என்கிற ஆராய்ச்சிதான் முக்கியமாக இருந்தது.

    அவரிடம் செ.யோகநாதனின் மறைவுக்கான அனுதாபம் இல்லை.

    • கனகராஜன்
     
  • சத்யராஜ்குமார் 9:02 am on May 14, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: சொக்கன், chokkan, kizhakku, rahman   

    ஏ. ஆர். ரஹ்மான் 

    இந்தியாவிலிருந்து நேற்று இறக்குமதியானது ‘ஜெய் ஹோ’ புத்தகம். எழுத்தாளர் சொக்கன் பரிசாகக் கொடுத்தது. பஸ்ஸிலும், ரயிலிலும், பஸ் ஸ்டாப்பிலுமாக இரண்டே நாளில் படித்து முடித்து விட்டேன்.

    பொதுவாக ரயில் டனலுக்குள் போனதும், செல்போனில் இன்டர்நெட் துண்டிக்கப்பட்ட நிலையில்தான் புத்தகம் படிக்க ஆரம்பிப்பேன். சொக்கனின் எளிமையான எழுத்து நடையில் வழுக்கி விழுந்து எப்போது டனலை விட்டு ரயில் வெளியே வந்தது என்பது கூடத் தெரியாமல் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன்.

    அ-புதினத்தில் ப்ளாஷ் பேக் உத்தியை நுழைத்தது சொக்கனின் சாமர்த்தியம். ஆஸ்கர் மேடையில் ஆரம்பித்த அத்தியாயம் அலுங்காமல் ரஹ்மானின் சின்ன வயதுக்குப் போய், மெதுவாய் அவர் வாலிபத்துக்கு வந்து மறுபடி ஆஸ்கார் மேடையில் முடியும் போதுதான் – அட இங்கேதானே ஆரம்பித்தார் என்று நினைவுக்கு வருகிறது.

    ரஹ்மானின் பாடல் வரிகளைக் கொண்டே வைத்த அத்தியாயங்களின் தலைப்புகள் ரசிக்கும்படி இருந்தன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடித்ததும், அத்தியாயத்தின் தலைப்பு என்ன என்று மறுபடி ஒரு முறை பக்கங்களை புரட்டிப் பார்க்க வைத்தன என்பது மட்டுமல்ல; சேப்டரை படித்து முடிக்கும் வரை தலைப்பாக வைக்கப்பட்ட அந்தப் பாடல் ஐ பாட் இல்லாமலே காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது.

    வாராந்திரிகளில் ரஹ்மான் பற்றி அவ்வப்போது படித்த சில தகவல்களை புத்தகத்தில் இருக்கும் தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நல்ல அனுபவம். ரஹ்மானை மணிரத்னத்திடம் அறிமுகப்படுத்தியது சுகாசினி என்றுதான் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். இப்புத்தகம் சொல்லும் தகவல் வேறு.

    ரஹ்மான் இளமைக்காலங்களில் இரவெல்லாம் ஸ்டுடியோக்களில் வேலை செய்து விட்டு அப்படியே நேராக பள்ளிக் கூடம் போய் விடுவார் என்பன போன்ற சிம்பதி அயிட்டம் முதல், ரோஜா பாடல் பதிவுக்கு வாசிக்க வாத்தியக்காரர்கள் வராத நிலையில் அம்மாவின் ஆணையை நிறைவேற்றிய மனோகரா டச் வரை சரியான விஷயங்களை சரியான இடத்தில் நுழைத்து புத்தகத்துக்கு நாவல் தன்மையை வரவழைப்பதில் கில்லாடியாய் இருக்கிறார் சொக்கன்,

    கேசட் கவரில் அத்தனை இசைக் கலைஞர்களின் பெயரையும் போட்டு கவுரவிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்த ரஹ்மான் போலவே, புத்தகத்தின் கடைசியில் புத்தகத்துக்கான தகவல் கொடுத்து உதவிய நண்பர்கள், இணைய தளங்கள் எல்லாவற்றையும் தொகுத்து அளித்திருப்பது நல்ல முன் மாதிரி.

    நன்கு புகழ் பெற்று விட்ட நிலையிலும் நஸ்ரத் பதே அலிகானிடம் ரஹ்மான் கவ்வாலி கற்றுக் கொண்டார் போன்ற விஷயங்கள் வெற்றியாளர்களின் ரகசியம் என்ன என்பதை பிட்டுப் பிட்டு வைக்கிறது. இது போன்ற பயக்ரபி புத்தகங்களில் ஒருவரின் வாழ்க்கையை சொல்வதைக் காட்டிலும், அவரின் வாழ்க்கையிலிருந்து மற்றவர்களுக்கான பாடத்தை அடிக்கோடிட்டுச் சொல்வதின் அவசியத்தை உணர்ந்து அதை பிசகில்லாமல் செய்திருக்கிறார் சொக்கன்.

    என்றோ மறைந்த தேசிய தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பை வறண்ட வார்த்தைகளில் பாடப்புத்தகங்களில் மட்டுமே வாசித்துப் பழகிய நமக்கெல்லாம் – கிழக்கு என்ற பதிப்பகமும், சொக்கன் போன்ற எழுத்தாளரும் இல்லையெனில் சம கால சாதனையாளர்களின் வாழ்க்கைக் கதைகளை ஜீவனுள்ள நடையில் படிக்கும் பாக்கியம் கிடைக்காமலே போயிருக்கும்.

    ரயிலில் பக்கத்தில் அமர்ந்திருந்த தமிழ்ப் பெண், புத்தகத்தின் அட்டைப்படத்தில் ரஹ்மான் படத்தைப் பார்த்து விட்டு, “எக்ஸ்க்யூஸ் மீ. இந்தப் புத்தகம் எங்கே வாங்கினீங்க? ” என்றார்.

    அமேசான் வெப்சைட்ல!” என்று புரை தீர்த்த நன்மை பயத்தேன்.

    UPDATE (1/7/2014): இந்தப் புத்தகம் இப்போது PDF வடிவில் இலவசமாக இங்கே கிடைக்கிறது.

     
  • சத்யராஜ்குமார் 5:37 pm on May 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: செஸ், chess, uscf   

    கறுப்பு வெள்ளை கட்டங்கள் 

    அறுபத்தி நாலு கட்டங்கள். கோடை விடுமுறையில் கோவை போகும்போது அறிமுகமானது. உறவுக்காரப் பையன்கள் பட்டை கிளப்புவார்கள். என்னுடைய சிப்பாய்களையும், குதிரைகளையும் கண்ட துண்டமாய் வெட்டிப் போடுவார்கள். ஒரு முறை கூட வென்றதில்லை.

    போன வார ஆட்டம்.


    லீவு முடிந்து சொந்த ஊர் திரும்பியதும், பக்கத்து வீட்டு பாலாஜியிடம் வீரம் காட்ட முயன்றேன். டிஸ்கவர்ட் அட்டாக் மாதிரி பாலாஜியின் முதுகுக்குப் பின்னிருந்து அவன் அண்ணன் முளைத்தான். மூன்றே மூவ்களில் என்னை Fool’s Mate பண்ணி தலை தெறிக்க ஓட வைத்தான்.

    அப்புறம் டீனேஜ் பருவத்தில் நண்பனின் அப்பா கிடைத்தார். அவருக்கு இலக்கிய ஈடுபாடு நிறைய உண்டு. நானும் அவரும் செஸ் விளையாடிக் கொண்டே இலக்கியம் பேசிக் கொண்டிருப்போம். சில சமயம் நான் ஜெயிப்பேன். சில சமயம் தோற்பேன். ஏன் ஜெயித்தேன்? ஏன் தோற்றேன்? காரணம் தெரியாது.

    பல வருஷங்களுக்குப் பின் சென்னையில் நண்பர்கள் அறையில் தங்கி வேலை தேடிக்கொண்டிருக்கும்போது மீண்டும் செஸ். முத்து என்னும் நண்பர் என் ராஜாவை விரட்டி விரட்டி அடிப்பது வழக்கம்.

    சூழ்ந்து நிற்கும் நண்பர்கள் கும்பல் அங்கே நகர்த்து, இங்கே நகர்த்து என கட்டளை விட ஆரம்பித்தால், கோபத்துடன் எழுந்து போய் விடுவேன். பேக் சீட் டிரைவிங் எனக்கு சுத்தமாக பிடிக்காது. தோற்றாலும் ஜெயித்தாலும் அது நானாக இருக்க வேண்டும்.

    வெறும் மூவ்மெண்ட்ஸ் மட்டும் தெரிந்திருந்தால் செஸ் ஆட்டம் தெரியும் என்று அர்த்தமல்ல என்று அங்குதான் புரிந்தது.

    செஸ் என்பது பகவத் கீதை. உற்று நோக்க நோக்க நிறைய தெரியும். அறுபத்து நாலு கட்டங்களுக்கிடையே நிறைய பதுங்கு குழிகள், வலை விரிப்புகள், கண்ணிகள், வஞ்சகங்கள் எல்லாம் இருப்பது கண்ணுக்குப் புலப்படும். வெறும் சிப்பாய்தானே என்று அலட்சியம் காட்டும் ராஜாக்களின் கர்வம் வீழ்வது புரியும்.

    அதற்கப்புறம் எனக்கு இந்த விளையாட்டுக்கு சரியாய் ஆள் கிடைக்கவில்லை. அமெரிக்கா வந்த பின் திடீரென ஒரு நாள், “அப்பா, வாங்க செஸ் விளையாடலாம்!” என்றான் அகில். அவனுக்கு சதுரங்கம் ஆடத் தெரியும் என்று எனக்கு அப்போதுதான் தெரியும். எனக்கு என் அப்பாவா சொல்லித் தந்தார்? அவ்வப்போது நானும், அவனும் விளையாட ஆரம்பித்தோம்.

    நாலைந்து மாதங்களுக்கு முன்புதான் இங்கே வாஷிங்டன் டி.சி யில் ஒரு செஸ் சென்ட்டர் இருப்பதறிந்தேன். ஒரு டோர்னமெண்ட் தினத்தில் அங்கே சென்று பார்த்த போது திருவிழா கூட்டம். குழந்தைகள் வயதில் மூத்த ஆட்டக்காரர்களையும் பிய்த்துப் பிய்த்து உதறிக் கொண்டிருந்தார்கள்.

    குழந்தைகளை ஆட விட்டு விட்டு, லேப் டாப் மேயும் தந்தைகள். ரவுண்ட் இடைவெளிகளில் குழந்தைகளின் வாயில் சாண்ட்விச் திணிக்கும் அம்மாக்கள்.

    நாலு ரவுண்ட் ஆட்டம் நாள் பூராவும் நடக்கிறது. என்னால் சும்மா உட்கார்ந்து வயர்லஸ் வெளியில் மேய்ந்து கொண்டிருக்க முடியவில்லை. நானும் யு எஸ் சி எப்பில் உறுப்பினராகி டோர்னமென்ட்களில் விளையாட ஆரம்பித்து விட்டேன்.

    பத்தொன்பது ஆட்டங்களுக்குப் பின் எனது ரேட்டிங் ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. பி கே எஸ்ஸின் பையன் இந்த விளையாட்டில் ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங் என்று ட்விட்டர் வழியே அறிந்துள்ளேன். போன மாதம் அகஸ்மாத்தாக அவரை சந்தித்த போது, “கொஞ்சம் முயன்றால் ஆயிரத்தி ஐநூறு வரை சுலபமாய் எட்டி விடலாம். அதற்கப்புறம் சரக்கு இருந்தால்தான் மேலே போக முடியும்.” என்றார்.

    என் மர மண்டைக்கு ஆயிரத்தி ஐனூறை எட்டினால் போதும். நான் ரிட்டையர் ஆகி விடுவேன்.

     
    • REKHA RAGHAVAN 7:00 பிப on மே 7, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      //செஸ் என்பது பகவத் கீதை. உற்று நோக்க நோக்க நிறைய தெரியும். அறுபத்து நாலு கட்டங்களுக்கிடையே நிறைய பதுங்கு குழிகள், வலை விரிப்புகள், கண்ணிகள், வஞ்சகங்கள் எல்லாம் இருப்பது கண்ணுக்குப் புலப்படும்.//

      மிகவும் சுவாரசியமாய் இருந்தது இதைப் படித்தவுடன். மேலும் செஸ் விளையாட கத்துக்கலையே என்ற ஆதங்கமும் ஏற்பட்டது .இதை எனக்கு பொறுமையாக கத்துக் கொடுக்க யார் இருக்காங்க?

      ரேகா ராகவன்
      (சிகாகோவிலிருந்து)

      • சத்யராஜ்குமார் 9:02 பிப on மே 9, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        இது கம்ப்யூட்டர் யுகம். உங்களுக்குப் பொறுமை இருந்தால் கம்ப்யூட்டரே சொல்லிக் கொடுக்கும். விஸ்டா, மேக் மற்றும் பல்வேறு லினக்ஸ் கம்ப்யூட்டர்களிலும் செஸ் ப்ரொக்ராம் உள்ளது.

    • சித்ரன் 12:31 முப on மே 8, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நான் ஒன்பதாப்பு படிக்கும் போது செந்தில் சிதம்பரம் என்றொரு நண்பன் இருந்தான். ரொம்பவும் அநாயாசமாக நான் கட்டங்களுக்கு முன் உட்கார்ந்த 3 நிமிடங்களில் காய்களை படக் படக் என்று வெட்டி என்னை புறமுதுகிடச் செய்வான். அந்த கால கட்டங்களில் செஸ் தெரிந்த பசங்களுடன் எலந்தவடை கடித்துக் கொண்டே கொஞ்சம் தீவிரமாக விளையாடித் தோற்றுக் கொண்டிருந்தேன். அப்புறம் ஆர்வம் குறைந்து இப்போது இட்லிவடை-யில் ஆனந்த்-டொபலாவ் ஆட்டம் பற்றிய அருமையான கட்டுரையை படித்தபோது செஸ் என்ற ஒரு அபாரமான ப்ரெய்ன் கேம் நல்லவேளையாக ஒரு இலந்தவடை ஆட்டக்காரனிடமிருந்து தப்பித்தது என்று நினைத்துக்கொண்டேன்.

      • சத்யராஜ்குமார் 9:05 பிப on மே 9, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        இங்கே டோர்னமெண்ட்களில் இனிப்பு வடை (டோனட்ஸ்) கடித்துக் கொண்டே ஆடுபவர்கள் இருக்கிறார்கள். அதற்கு எலந்த வடை கொஞ்சமும் குறைந்ததில்லை 🙂 வாங்க ஆடலாம் வாங்க.

    • கே.பி.ஜனா 8:37 முப on மே 9, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      செஸ் கார்னர் இப்படி லஸ் கார்னர் அளவு பெருசாவும் சுவாரசியமாவும் இருக்கும்னு நினைக்கலே.

    • பத்மநாபன் 12:47 பிப on மே 9, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சதுரங்கம் – பகவத் கீதை …..நல்ல ஒப்பிட்டு வரிகள் . விரைவில் 1500 அடைந்து விடுவீர்கள் ..அதற்குள் அகிலும் அதை தாண்டி விடுவார் ..அவர்களுடைய வேகமே தனி … நம் நண்பன் லட்சுமணன் சதுரங்கத்தில் கில்லாடி ..வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் யாரோ ஒரு நண்பரோடு விளையாடி கொண்டிருப்பான் .. வலையில் அலைவதற்கு முன் நானும் என் கணினி யோடு பழகிவந்தேன் ..ஆரம்ப நிலை , அடுத்த நிலை என்று பத்தில் ஐந்து வரை என் கணினி என்னை வெல்லவைத்தது…சுத்தமாக மறந்திருந்தேன் உங்கள் பதிவை பார்த்ததும் அந்த விளையாட்டு என் கணினியில்இருப்பதே ஞாபகம் வந்தது .. உங்களிடமும் இருக்கும் என்று நினைக்கிறேன் ( chess Titans ) நன்றாக அமைக்க பட்டுள்ளது .

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி