மூஞ்சில குத்து


சென்னையின் வெயிலைவிடக் கொடுமையான ஒரு விஷயம் உள்ளதென்றால் அது அந்த வெயிலில் பேருந்தில் போவதுதான். யாராவது உன்னைக் குளிரூட்டப்பட்ட காரில் கூட்டிச் செல்கிறேன், ஒரு கொலை செய்கிறாயா என்று கேட்டால் கூசாமல் கொலை செய்யச் சம்மதிக்கச் சொல்லும் கொடுமை அது.

அதிலும் இந்த வெப்பத்தில் உடல்கள் உரசிக் கொண்டு நிற்கும் கொடுமை இருக்கிறதே… ஏதோ நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வறுப்பது என்று சொல்வார்களே… சென்னைவாசிகள் நரகம் சென்றால் அது ஒன்றும் அவர்களுக்குப் பெரிய பனிஷ்மென்ட்டாய்த் தோன்றாது என்றே தோன்றுகிறது.

இப்போது யோசித்துப் பாருங்கள்… இதில் நான் காலையும், மாலையும் அலுவலகத்துக்குப் போகவரப் பேருந்தை உபயோகப்படுத்துபவன். ஆனால் இந்தப் பயணங்களில் எக்ஸ்ட்ராவாய் எனக்குப் புரியாத விஷயம் ஒன்று உண்டு.

எங்கள் ஊரில்,”வெளுக்கறவன் கழுதைக்கு வரப்போக சுமை…” என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போது பெரும்பாலான  சாஃப்ட்வேர் ஆட்களையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. எல்லாப் பையன்களும் அதிலும் குறிப்பாக கணிப்பொறி ஆட்கள் போலத் தோன்றும் இளைஞர்கள் எல்லோரும் முதுகில் ஒரு பேக் பேக்கை மாட்டியுள்ளார்கள்.

பேருந்தில் உள்ளிருக்கும் நேரங்களில்கூட அவர்கள் அதைக் கழற்றுவதில்லை. கர்ணனின் உடலுடன் ஒட்டிப் பிறந்த கவசம்போல அவர்களுக்கு அது.

முதலில் தொழில் சம்பந்தமாக லேப்டாப் ஏதாவது கொண்டு செல்கிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் உண்மையிலேயெ நான் சொன்ன கழுதை போல் துவைக்கும் துணிகளைச் சுமந்து செல்கிறார்களோ என்று இப்போது சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் கொண்டு செல்லும் அந்தப் பைகள் அவ்வளவு பெரிதாய்ப் புடைத்திருக்கின்றன.

அதிலும் அந்த பேக்கை மாட்டிகொண்டு பேருந்தின் உள்ளே கூட்டத்தின் இடையே புகுந்து எல்லோருடைய முகத்திலும் பேக் உரச உரச நடப்பதும், கூட்டத்தின் நடுவே வந்து அந்த பேக்குடன் அப்படியே நின்றுகொள்வதும், யாரைப் பற்றியும் கவலைப் படாமல் இஷ்டத்திற்கு மொபைல் பேச்சும் அதுவுமாய்ச் சுற்றுகையில் அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதோ இவர்களுக்கு என்றே எண்ணத் தோன்றும்.

முதலில்  பொறுத்துக்கொண்டாலும் நாட்பட நாட்பட இது ஒருவாறு பெரும் எரிச்சலாகிக் கொண்டே வந்தது. ஒருநாள் காலையில் பேருந்தில் இதே போன்ற ஒரு நிகழ்வு நடக்க, நல்ல எரிச்சலுடனும் ஆனால் முகத்தில் ஒரு மாறாத புன்சிரிப்புடனும் அந்த இளைஞனைக் கேட்டேன்.

“ஏன் தம்பி… இந்த பேக்கை கழற்றி உட்கார்ந்திருக்கும் யாரிடமாவது கொடுக்கக் கூடாதா…? எல்லோருக்கும் கஷ்டமாய் இருக்கில்ல…?”.

சொல்லிவிட்டு இத்தனைபேர் எதிரில் கேட்டுவிட்டோமே… அவன் ஏதாவது வருத்தப்படுவானோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பதிலுக்கு அவன் கேட்ட கேள்வி என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

“சார்… நீங்க வெளியூரா…?”.

ஆக, பேக் முகத்தில் இடிக்கிறது… கொஞ்சம் கழற்றி வை…!” என்று பேருந்தில் சொல்பவன் சென்னைக்குப் புதுசு என்ற புதிய உண்மை எனக்கு அன்றைக்குத் தெரியவந்தது.