உன்னைப் போல் ஒருவன்: விமர்சனம் அல்ல
சென்ற வெள்ளிக்கிழமை. திரையிட்ட இரண்டாம் நாள். இரவு 9.45-க்கு ஷோ. ‘ரஜினி படம்ன்னா வரேன். கமல் படம் DVD வந்த பிறகு பார்த்துக்கறேன்.’ என்று சொல்லி விட்ட common woman மனைவி. ஆகவே எனக்கும், அகிலுக்கும் மட்டும் movietickets.com-ல் முன்பதிவு செய்தேன். 3-11 வயது வரை அரை டிக்கட் வாங்கினால் போதும் என்று அந்த தளத்தில் போட்டிருந்ததால் அகிலுக்கு பாதி விலையில் டிக்கட்.

உன்னைப் போல் ஒருவன்
“ஏன் ஒன்பது மணிக்கே கிளம்பணும்?” என்று கேட்ட அகிலுக்கு தமிழ் படம்ன்னா கூட்டம் அலை மோதும். லேட்டாய் போனால் நீ ஒரு இடத்திலும் நான் ஒரு இடத்திலும் உட்கார வேண்டி வரும் என்று பதில் சொன்னேன். சிவாஜி, சந்திரமுகி அனுபவம். அவன் அதிருப்தியாய் தலையாட்டினான். Fairfax-ன் கிழகோடியில் தியேட்டர். இந்த திரையரங்கையும், இன்னும் சில திரையரங்குகளையும் ரிலையன்ஸ் குத்தகைக்கு எடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். வாரம் ஒரு தெலுங்கு அல்லது ஹிந்தி படம் வெளியாகிக் கொண்டிருக்கிறதாம்.
தமிழ்ப்பட ரசிகர்கள் இணையம் தாண்டி வர மறுப்பதால் மணிரத்னம், கமல், ரஜினி படங்கள் வந்தாலொழிய தியேட்டரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்காது. பத்து நிமிஷ டிரைவில் தியேட்டரை அடைந்தபோது அகில் நான் சொன்னதை நம்பினான். அங்கே பெருந்திரளாய் கூட்டம். திருவிழா உணர்வு ஏற்பட்டது. மச்சி, மச்சான் என்று செந்தமிழ் குரல்கள் கேட்டன.
கவுண்ட்டரில் போய் இணையத்தில் முன்பதிவு செய்த கடன் அட்டையை கொடுக்க, இ-டிக்கெட் கிடைத்தது. அங்கே 3-5 வயது வரை அரை டிக்கட் என்று ஒரு அறிவிப்பு பெரிதாய் எழுதி ஒட்டியிருந்தது பார்த்து திடுக்கிட்டாலும், இணையத்தில் வாங்கினால் எதுவுமே சகாய விலையில் கிடைக்கும் என்று சமாதானமாகிக் கொண்டேன்.
பூட்டியிருந்த கண்ணாடிக் கதவின் முன்னால் டைனோசரின் வால் மாதிரி பெரிய க்யூ. அதில் நானும், அகிலும் போய் இணைந்து கொண்டோம். இப்படி ஒரு கூட்டம் ஆங்கிலப் படங்களுக்கு அரிதிலும் அரிது என்பதால் அந்த காம்ப்ளக்ஸின் இதர கடைகளுக்கு வந்த வெள்ளைக்காரர்கள் வினோதமாய் பார்த்து ரசித்துச் சென்றார்கள்.
இதற்குள் எனக்கு அறிமுகமான சிலர், ‘ஹாய்’ சொன்னார்கள். க்யூவில் முன்னால் நின்றிருந்த இரு இளைஞர்கள் அங்கே ரகம் ரகமான கார்களில் வந்திறங்கும் நம்மவர்களையும் அவர்கள் கார்களையும் ஒருவர் பாக்கியில்லாமல் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். ”எந்த ஒரு தேசிப்பயலாவது இப்படி ஒரு கார் (க்ரைஸ்லர் PT Cruiser) வாங்குவானா? இது காலேஜ் பொண்ணுங்க வாங்கி ஓட்டற கார்!”
படம் பார்க்கும் ஆவலில் சாப்பிடாமல் கிளம்பி வந்து விட்ட ஒரு குடும்பத்தின் பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா என கவலையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.
தனது வெள்ளைக்கார காதலியுடன் க்யூவில் நின்றிருந்தார் ஒரு பச்சைத் தமிழர். சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருந்த அந்த அழகான அமெரிக்கப் பெண்தான் சென்டர் ஆப் அட்ராக்’ஷன். பல இளைஞர்களின் காதில் புகை. அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று பின்னர் புரிந்தது.
காரை விட்டிறங்கிய ஒரு அமெரிக்க தாத்தா நேராக என்னை நோக்கி தள்ளாடித் தள்ளாடி வந்து, “எக்ஸ்க்யூஸ்மீ.” என்றார். உலக நாயகனுக்கு இவ்வளவு மவுசா என்று நான் வியந்து கொண்டே, “வரிசை தொலைவில் ஆரம்பிக்கிறது. இன்னும் பின்னால் போங்க.” என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் எனக்கு முன்னால் நின்றிருந்த ஆள் வழி விடவே, அவர் அந்த வராண்டாவில் இருந்த தபால் பெட்டியில் கடிதத்தை போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி சொல்லி விட்டு மறைந்தார்.
மணி பத்தான பின்னும் கதவு திறக்காததால் அகில், “என்னப்பா ஒன்பதே முக்கால் ஷோன்னு சொன்னீங்க?” என்றான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதற்குள் நல்ல வேளை சொர்க்க வாசல் திறந்தது.
இருட்டான கொட்டகைக்குள் நுழையும்போது ஹிந்தி பட ட்ரெயிலர் திரையில் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாரும் இருக்கை பிடித்து அமர்ந்த பின்தான் இதெல்லாம் ஒரு கூட்டமே இல்லை என்று புரிந்தது. பாதி தியேட்டர் கூட நிரம்பவில்லை.
சாவகாசமாய் படம் துவங்கி டைட்டில் கார்டு போட ஆரம்பிக்க, கமலுக்கும், ஸ்ருதிக்கும் மட்டும் சப்பையாய் கை தட்டினார்கள். அதற்கப்புறம் ஒரு குழந்தை அழுத சப்தம் தவிர பெரிதாய் ரியாக்’ஷன் இல்லை.
இடைவேளையில் மெக்சிகோ நாட்டுக்காரியின் கையால் சமோசா வியாபாரம் அமோகமாய் நடந்தது. மீடியம் கோக்… நாலரை டாலர். இரவு பனிரெண்டே கால் மணி போல படம் முடிந்தது.
Netflix ஸ்ட்ரீமிங் மீடியாவில் A Wednesday நாலைந்து முறை பார்த்து விட்டதால் இந்தப் படம் புதிதாய் பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை. தமிழுக்கு இப்படி ஒரு படம் அவசியம்தான் என்று மட்டும் மனசில் பட்டது.
ரொம்ப நாள் கழித்து பல நண்பர்களை அங்கே குடும்பத்தோடு சந்தித்தேன். படம் முடிந்து வெளியே வந்த பிறகு நாங்கள் எல்லோரும் தியேட்டர் வாசலிலேயே உட்கார்ந்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஏழெட்டு குடும்பங்கள்! குழந்தைகள் அந்த அர்த்த ராத்திரியில் ஜாலியாய் ஓடிப் பிடித்து விளையாடின.
நன்றி கமல் ஸார்.
- சத்யராஜ்குமார்
என். சொக்கன் 10:29 பிப on செப்ரெம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் |
//அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று பின்னர் புரிந்தது//
:))))
ஒரு சின்ன யோசனை –> Comments link topலமட்டும் இருக்கிறது டெம்ப்ளேட் பிரச்னைன்னு புரியுது, ஆனா பலர் அதைக் கவனிக்காம போயிட வாய்ப்பு உண்டு. பேசாம ஒவ்வொரு போஸ்ட்லயும் கீழ ஒரு வரி நீங்களே காபி – பேஸ்ட் செஞ்சுடலாமே – இன்னும் அதிகப் பேர் கருத்துச் சொல்வார்கள், அந்தப் புண்ணியத்தால் உங்களுக்கு அடுத்த கமல் படத்தில் ஒரு சின்ன வேஷம்கூட கிடைக்கலாம்!
சத்யராஜ்குமார் 11:11 பிப on செப்ரெம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் |
சொக்கன், நீங்கள் சொல்வது சரி. இந்த டெம்ப்ளேட் மாற்றிய பிறகு கருத்து சொல்வது குறைந்துள்ளது. குழுவாக பதிவு செய்ய இந்த வார்ப்புருதான் (ஹையா தமிழ்!) சரியாக இருக்கிறது. உங்கள் அருமையான யோசனையை செயல்படுத்த முயன்றேன். வேலை செய்யவில்லை. ஜாவாஸ்க்ரிப்டினால் காண்பிக்கப்படும் கருத்துப் பெட்டிக்காக அந்த லின்க்கில் dyanamic-ஆக ஒரு எண் சொருகப்படுகிறது. வேறு வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்! கமல் படத்தில் சான்ஸ் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை போலிருக்கு. 🙂
அறிவிலி 10:59 பிப on செப்ரெம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் |
போச்சுரா… இன்னோரு உ.போ.ஒ விமர்சன்மா என்று வநதேன். நல்ல வேளை, படத்தை பத்தி நெறைய எழுதாம, உங்க அனுபவத்த எழுதிருக்கீங்க. 🙂
சத்யராஜ்குமார் 11:14 பிப on செப்ரெம்பர் 25, 2009 நிரந்தர பந்தம் |
ராஜேஷ், 🙂
subhashree 12:46 பிப on செப்ரெம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் |
oh..nothing about mr.mohanlal…so sad..anyway nice description…i enjoyed especially ..kamal is talking in english for that beautiful girl..ha..ha..ah…good…u remind me too much of mr.sujatha….
சத்யராஜ்குமார் 10:08 பிப on செப்ரெம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் |
சுபஸ்ரீ, மோகன்லாலும் சரி, அந்த இளம் அதிகாரிகளும் சரி அருமையாக நடித்திருந்தார்கள். சலங்கை ஒலியில் கமலை குதிக்க வைத்து தாறுமாறாக போட்டோ எடுத்து விட்டு, ”அய்யே காலு! இது தலை!” என்று வழியும் குண்டு பையன்தான் படத்தின் இயக்குனராமே!
ila 1:52 பிப on செப்ரெம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் |
நாங்க ஏழு பேர் தான் இருந்தோம்,. முதல் நாள்
சத்யராஜ்குமார் 10:10 பிப on செப்ரெம்பர் 26, 2009 நிரந்தர பந்தம் |
இளா, வியாழக்கிழமை ராத்திரி படம் பார்க்க கூட்டம் கூடுவது கொஞ்சம் சிரமம்தான். 😦 பொதுவாக கமல், ரஜினி படங்களை கூட்டமில்லாத தியேட்டரில் பார்ப்பது அத்தனை சுவாரஸ்யமாக இருக்காது, இல்லையா?
REKHA RAGHAVAN 8:01 முப on செப்ரெம்பர் 27, 2009 நிரந்தர பந்தம் |
//பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா என கவலையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.//
இந்த வரிகளை ரசித்தேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் செய்கிற அங்க சேஷ்டைகளுக்காகவே விரும்பி போவதால் கதை இல்லாவிட்டாலும் பரவாயில்லை எனக்கு.
ரேகா ராகவன்.
சத்யராஜ்குமார் 10:27 முப on செப்ரெம்பர் 27, 2009 நிரந்தர பந்தம் |
ரேகா ராகவன், ஷங்கர் படத்துக்கு நிகரான சுவாரஸ்யமான கதையும், எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாத திரைக்கதையும் படத்தில் உண்டு.
டைனோ 9:13 முப on செப்ரெம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் |
>>>பொறுப்பான மனைவி பிளாஸ்டிக் பேகில் வைத்திருந்த கட்டுச் சோற்றை தியேட்டர்காரன் உள்ளே விடுவானா<<>>அந்தப் பெண்ணுக்காகத்தான் முக்கியமான வசனங்களைக் கூட கமல் ஆங்கிலத்தில் பேசுகிறார்<<>>போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி <<>>நல்ல வேளை சொர்க்க வாசல் திறந்தது. <<>>ஒரு குழந்தை அழுத சப்தம் தவிர பெரிதாய் ரியாக்’ஷன் இல்லை<<<
பஞ்ச் இல்லாம முடிச்சது!
உங்க க்ராப்டை சிலாகிக்காம படிக்க முடியல… நல்ல எழுத்துங்க உங்களுக்கு!
சத்யராஜ்குமார் 7:51 பிப on செப்ரெம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் |
பாராட்டுக்கு நன்றிங்க டைனோ!
RaviSuga 10:18 முப on செப்ரெம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் |
நகைச்சுவையாக எழுதியுள்ளிர்கள், அருமை.
Dagilbatcha 10:28 முப on செப்ரெம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் |
Good One. When everyone is writing about the movie, this one was different and enjoyable.
சத்யராஜ்குமார் 7:53 பிப on செப்ரெம்பர் 29, 2009 நிரந்தர பந்தம்
Dagilbatcha, Thanks for the compliments.
சத்யராஜ்குமார் 7:52 பிப on செப்ரெம்பர் 29, 2009 நிரந்தர பந்தம் |
நன்றி ரவி!
Sentil 1:32 பிப on செப்ரெம்பர் 30, 2009 நிரந்தர பந்தம் |
“காரை விட்டிறங்கிய ஒரு அமெரிக்க தாத்தா நேராக என்னை நோக்கி தள்ளாடித் தள்ளாடி வந்து, “எக்ஸ்க்யூஸ்மீ.” என்றார். உலக நாயகனுக்கு இவ்வளவு மவுசா என்று நான் வியந்து கொண்டே, “வரிசை தொலைவில் ஆரம்பிக்கிறது. இன்னும் பின்னால் போங்க.” என்று சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் எனக்கு முன்னால் நின்றிருந்த ஆள் வழி விடவே, அவர் அந்த வராண்டாவில் இருந்த தபால் பெட்டியில் கடிதத்தை போஸ்ட் பண்ணி விட்டு, வழி விடாத எனக்கும் சேர்த்து நன்றி சொல்லி விட்டு மறைந்தார்.”
Dear Satya, As I read the title, am very sure you would have captured many special incidents happened around you during the movie other than the movie itself. As expected you have sincerely done it. Very hilarious.
சத்யராஜ்குமார் 6:25 பிப on செப்ரெம்பர் 30, 2009 நிரந்தர பந்தம் |
செந்தில், ஒரு திரைப்படத்தை வீட்டில் DVD-யில் பார்ப்பதற்கும், தியேட்டரில் பார்ப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் சுற்றி நடக்கும் சுவாரஸ்யங்கள்தான். அவசர வாழ்க்கை, பொருளாதாரம் போன்றவற்றால் இழக்கும் பலவற்றில் அதுவும் ஒன்று. உங்கள் கருத்துக்கு நன்றி!