கரும்புனல் 

புத்தக விமர்சனமெல்லாம் எனக்கு வேற்று கிரகம்.

இருந்தாலும் இரண்டு நண்பர்களின் புத்தகங்கள் என்னை என்ன செய்தன என்பதை எழுதுவதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். முதலில் சென்ற புத்தகக் கண்காட்சியின் பெஸ்ட் செல்லரான ராம் சுரேஷின் ‘கரும்புனல்’.

லேபர் வார்டில் இந்த நாவலின் தொப்புள் கொடியை அறுத்தவுடனேயே, டிரஸ் எல்லாம் போடாமல் அப்படியே என் கையில் தந்தார்கள். குழந்தை அப்பா ஜாடையா, அம்மா ஜாடையா என்று கண்டுபிடிக்க முடியாததையொத்த சிரமம் இந்த மாதிரி அச்சில் வராத கதைகளைப் படிப்பதில் இருக்கிறது.

இதுவரை நான் எழுதிய இருநூற்றுக் கணக்கான சிறுகதைகளிலிருந்து ஒரே ஒரு சிறந்த கதையை எடுத்துத் தரச் சொன்னால் கல்கியில் முதல் பரிசு பெற்ற ‘அந்நிய துக்கம்’ சிறுகதையை எடுத்துக் கொடுப்பேன். அக்கதையை டைப் அடித்துக் கொண்டு போய் முதலில் என் நண்பனின் அப்பாவிடம் கொடுத்தேன். நல்ல படிப்பாளி. அவர் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் என்றும் சொல்லலாம். அவர் கற்ற, பெற்ற இலக்கிய அனுபவங்களையெல்லாம் உட்கார்ந்து மணிக்கணக்காய் என்னிடம் பேசுவார். அச்சில் வரும் என் கதைகளையும் படித்து ஆகா இது அருமை, இது சொத்தை என்று விமர்சனம் வைப்பார். அந்நிய துக்கம் சிறுகதையை அவர் ஒன்றும் பெரிதாய் அப்போது சிலாகிக்கவில்லை. அக்கதை பரிசு பெற்று அச்சில் வந்த கொஞ்ச நாள் கழித்து, “கதை பிரமாதமா இருக்குப்பா. கண்டிப்பா பரிசு கொடுப்பாங்கன்னு அப்போ நீ சொன்னே. ஆனா அச்சில் வராத கதையைப் படிக்கிறப்போ என்னால கணிக்க முடியலை. ஆனா உனக்கு அந்த நுட்பம் தெரிஞ்சிருக்கு. அதுதான் அச்சிதழ் வாசகனுக்கும், எழுத்தாளனுக்குமுள்ள வித்தியாசமோ?” என்றார்.

ராம் சுரேஷ் அச்சுக்குப் போவதற்கு முன்பு ஒரு மிகச் சிறிய அவகாசத்தில்தான் இந்த நாவலின் டிராஃப்ட்டை எனக்குப் படிக்கத் தந்தார். மனதில் பட்ட சிறு சிறு நெருடல்களை அப்போது அவரிடம் சொன்னேன். நேரமிருந்தால் மாற்றம் செய்கிறேன் என்றார். ஆனால் அவகாசம் இருந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் அந்த நெருடல்கள் இப்போது அச்சில் படிக்கையில் இல்லை. அச்சுப் புத்தகம் டீம் வொர்க். இதழாளர்கள் எழுத்தாளன் எழுதிக் கொடுத்ததைப் புரிந்து கொண்டு வாசகனை அதற்கேற்றாற்போல் தயார்ப்படுத்தி விடுகிறார்கள்.

டிராஃப்ட்டில் படித்த போது மூன்று பக்கங்கள் தாண்டியும் எனக்கு கதை எங்கே நடக்கிறதென்ற ஜியாகிரஃபி புரியவில்லை என்றேன். இப்போது பீகார், நிலக்கரிச் சுரங்கம் என்பதெல்லாம் மிக அழகாய் ஸ்டேஜ் செய்யப்பட்டாகி விட்டது. இந்தப் புத்தகம் வாங்கும்போதே எது பற்றிப் படிக்கப் போகிறோம் என்று வாசகனுக்குத் தெரியும்.

என்னுடைய தங்கையின் கணவர் இதே நிலக்கரிச் சுரங்கம், இதே பீகார், ஒரிஸா பார்டரில் எண்பதுகளின் இறுதியில் வேலை பார்த்திருக்கிறார். அவர் எனக்கு நிறைய அனுபவக் கதைகள் சொல்லியிருக்கிறார். ஒவ்வொன்றும் அவ்வளவு சுவாரஸ்யமானவை. சற்றே திகிலுமானவை. இந்த நாவல் படிக்கையில் மறுபடியும் ஒரு மூன்று மணி நேரம் அவருடன் உட்கார்ந்து அதே கதையைப் பேசின மாதிரி இருக்கிறது.

நயாகரா நீர் வீழ்ச்சி மாதிரி சரக்கென்று உள்ளிழுத்து மூழ்கடித்து விடும் விறுவிறுப்பான கதையோட்டம், அதிகாரிகளின் காய் நகர்த்தல்கள் என்றாலும் அலுப்பில்லாமல் படித்துச் செல்ல முடிவது, கதையில் வரும் தீபாவின் காதல், வர்மாவின் வன்மம், சாஹஸ் மோட் குக்கிராமம், லோபோ எனும் அற்ப வில்லன், ஊழல், ஜாதி, அதிகார நயவஞ்சகம் பற்றியெல்லாம் முன்னுரை எழுதிய ஆர். வெங்கடேஷ் முதற்கொண்டு, சோஷியல் மீடியாவில் விமர்சனம் எழுதிய அத்தனை பேரும் எழுதித் தள்ளி விட்டார்கள். அதையே நான் மறுபடி ஒரு முறை ரப்பர்ஸ்டாம்ப் குத்துவதால் ஏற்கெனவே பெஸ்ட் செல்லரான இந்நாவலுக்கு ஒரு மாற்று கூடவோ குறையவோ போவதில்லை.

ஆகவே, எழுத்தாளருக்கு சில கருத்துகளை மட்டும் முன் வைக்க விரும்புகிறேன். இவர் சுஜாதாவைக் கரைத்துக் குடித்தவர் என்பது வார்த்தைக்கு வார்த்தை மின்னுகிறது. பின்பாதியில் வக்கீல் சந்துருவுக்கு உதவியாக பீகாருக்கு அனுப்பப்பட்டவரிடம் வசந்த் வாடை அடிக்கிறதையும் தவிர்த்திருக்கலாம். கதை நெடுக இருக்கும் கேள்விக்குறி வாக்கியங்கள் கொஞ்சம் பழசாகிப் போன உரை வடிவம். அடுத்த நாவல் எழுதுவதற்குள் தனக்கென்று ஒரு மொழி நடையை இவர் கட்டாயம் அடையாளம் காண வேண்டும்.

டாக்குமெண்ட்டரி சமாசாரங்களைக் கூட இவ்வளவு சுவாரஸ்யமாய் சொல்லக் கூடிய இவர் போன்ற எழுத்தாளர்களால்தான் டி.வி அபத்தங்களில் சிக்காமல் இருக்கும் மிச்ச சொச்ச வாசகர்களை இனி காப்பாற்ற முடியும்.