நெருக்கடி 

தொம்மென்று பெரிய சப்தம். 

தென்றல் யூ ட்யூபில் ஆல்பபெட் பாடல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் அம்மா கிச்சன் வேலையை முடித்து அப்போதுதான் ஹால் சோபாவில் சற்றே ரிலாக்ஸாக அமர முயல்கிறாள். நேரம் காலை 10:56. இரண்டு பேருமே சத்தம் வந்த திசைக்கு அவசரமாய் திரும்புகிறார்கள். 

பால்கனியில் ஓர் உயரமான உருவம். நீண்ட முடி. அழுக்கான கோட். வெளிர் பச்சை கண்கள். தடுப்புக் கம்பிகளை தாண்டிக் குதித்திருந்தான் அவன். செல்போன் அல்லது ஏதாவது பொருளை தவற விட்டு அதை எடுக்கக் குனிந்திருப்பானோ? முதலில் அப்படித்தான் நினைத்தாள் தென்றலின் அம்மா. 

இல்லை. அவன் Patio கண்ணாடி கதவை நோக்கி முன்னேறி வருகிறான். ஜன நெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதி அது. முகப்புக் கதவை அடைய ரகசிய எண்கள் தேவை. எனவே பாதுகாப்பான இடம் என்றுதான் இது நாள் வரை எண்ணம். இப்படி பால்கனியில் குதித்து ஒருவன் உள்ளே நுழையத் துணிவான் என்று கனவிலும் நினைக்கவில்லை. 

தென்றலின் அம்மா பதறிப் போய் கூச்சலிடுகிறாள். ” ஏய்… யார் நீ ? போ வெளியே… போ… போ.. ” அவன் சட்டை செய்யாமல் ஆளுயர பால்கனி கண்ணாடி கதவை நகர்த்த முயல்கிறான். தென்றலின் ஒண்ணே முக்கால் வயது மூளையில் கூட இது விபரீதம் என்று சிவப்பு விளக்கு எரிந்திருக்க வேண்டும். மிரண்டு போய் அம்மாவிடம் தாவி இறுக்கிக் கொண்டு பிஞ்சுக் குரலில் கத்துகிறாள்.  ” போ.. போ.. ”

சர்வ சாதாரணமாய் துப்பாக்கிகள் புழங்கும் தேசம் இது. இனியும் போ போ எனக் கத்திக் கொண்டிருப்பது வீண் என்று உணர்கிறாள் தென்றலின் அம்மா. அவளை ஒரு கையில் அள்ளிக் கொண்டு கம்ப்யூட்டர் மேஜை மேலிருந்த செல்போனை இன்னொரு கையில் பொறுக்கிக் கொண்டு படுக்கையறைக்கு ஓடிச் சென்று கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொள்கிறாள். பால்கனி கதவை உடைத்துக் கொண்டு அவன் உள்ளே வருவதாயிருந்தால் அதற்கு ஐந்து நிமிடங்களாவது பிடிக்கும். 911 ஆபத்து கால சேவை எண்ணை விரல் நடுங்க அழுத்துகிறாள். 

மறு முனையில் பெண் குரல் நிதானமாக நிலைமயைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறது. நீ இருக்கும் இடத்தில் இருந்து அவனைப் பார்க்க முடிகிறதா? அவன் எப்படி இருப்பான் ?

பார்த்த சில வினாடிகளில் மனதில் பதிந்த அடையாளங்களை பதட்டமாக விளக்குகிறாள் தென்றலின் அம்மா. ” வெளியே அவன் என்ன செய்கிறான் என்று தெரியாது.  ஆனால் யாரும் உதவிக்கு வராமல் நான் இப்போது வெளியே வர மாட்டேன் ”

” கவலைப் படாதே. போலிஸ் அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். நீ சொல்வதை அவர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ” பெண் குரல் அடுத்த சில நிமிடங்களுக்கு இடை விடாமல் பேசி நிலைமையை தெரிந்து கொள்ளவும், இவர்களை ஆசுவாசம் செய்யவும் முயல்கிறது. ஏழு நிமிடங்கள் ஏழு யுகங்களாகக் கழிந்திருக்க ஒரு வழியாய் போலிஸ் ஸ்தலத்துக்கு வந்து விட்டதாக பெண் குரல் சொல்கிறது. 

” அதிகாரிகள் உன் வீட்டின் முன்னே இருக்கிறார்கள். இப்போது பயமில்லை. அவர்கள் கதவைத் தட்டியதும் நீ தைரியமாக வெளியே செல்லலாம். ”

கதவு தட்டப்படுகிறது. 

ப்ளைண்சை நீக்கிப் பார்க்க இரண்டு போலிஸ் கார்கள் சிவப்பும் நீலமுமாய் விளக்குகள் பளிச்சிட நிற்கின்றன. தென்றலின் அம்மா இயந்திரம் போல போய் கதவைத் திறக்கிறாள். ஆஜானுபாகுவாய் இரண்டு போலிஸ் அதிகாரிகள் வீட்டுக்குள் நுழைகிறார்கள். ஒருவர் கண்களால் வீடு முழுவதும் சட்டென அளக்கிறார். இன்னொருவர் விசாரிக்கிறார்.

”  வந்தவன் தாடி வைத்திருந்தானா ? ”

” கவனிக்கவில்லை. ”

” கறுப்பனா, வெள்ளையனா, மெக்சிகனா? ”

” வெள்ளைத் தோல் என்பது மட்டும் தெரியும். அவன் வெள்ளையனா, மெக்சிகனா என்பது தெரியாது. கறுப்பு கோட் அணிந்திருந்தான். தோள் வரை நீளமாய் முடி இருந்தது. ”

இன்னொரு அதிகாரிக்கு சட்டென்று ஏதோ பல்பு எரிய, ” அவனை நான் பார்த்தேன். கொஞ்சம் இருங்க. ” அவசரமாய் ஓடிச் செல்கிறார். சற்று நேரத்தில் அவரிடமிருந்து போன் வருகிறது. ” நான் ஆளைப் பிடித்து வைத்திருக்கிறேன். அடையாளம் காட்ட அந்தப் பெண்ணை கூட்டி வரவும். ”

அதிகாரி தைரியம் தருகிறார். ” பயப்படாமல் வா. உன்னை அவனால் பார்க்க முடியாது. நான் காரை அங்கே ஓட்டிச் செல்கிறேன். ஆள் அவன்தானா என்று சொன்னால் போதும். குழந்தை வேண்டாம். பாதுகாப்பில்லை. யாரிடமாவது ஒப்படைக்க முடிந்தால் நல்லது. ” 

தோழியை வரச் சொல்லி தென்றலை ஒப்படைத்து விட்டு போலிஸ் காரின் பின் சீட்டில் அமர்கிறாள் அவள் அம்மா. ஜன நடமாட்டம் மிகுந்த சாலைக்கு வழுக்கிச் சென்ற கார் எதிர்சாரியிலிருந்த மெக்டோனல்ட்ஸ் அருகே செல்கிறது. அங்கே மேலும் நான்கு போலிஸ் கார்கள் தாறுமாறாய் நின்றிருக்க, அதன் நடுவே அவனைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். 

தென்றலின் அம்மா திகைத்துப் போகிறாள். அவனேதான். மிகச் சரியாய் அவனேதான். 

oOOo

இந்த களேபரங்கள் எல்லாம் முடிந்த பிறகுதான் எனக்குத் தகவல் வந்தது. நான் ஆபிஸிலிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்த பின்னும் தென்றல் மற்றும் அவள் அம்மாவிடம் பதட்டம் மிச்சமிருந்தது. தென்றல் Patio கண்ணாடிக் கதவை காட்டி, ” போ, போ ” என்று சொல்லிக் காண்பித்தாள். 

நான் போலிஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு விபரம் கேட்டேன். ” பயப்பட வேண்டாம். அவன் இப்போது ஜெயிலில்தான் இருக்கிறான். எலக்ட்ரானிக் பொருட்கள் திருட முயற்சித்திருக்கலாம். விசாரித்து வருகிறோம். விசாரணை முடிந்த பிறகு உங்களுக்கு விரிவாக ரிப்போர்ட் அனுப்பி வைக்கிறோம். ”

சில மணி நேரங்கள் கூட இருந்து தென்றலையும் அவள் அம்மாவையும் ஆசுவாசப்படுத்தி விட்டு மறுபடி ஆபிஸ் கிளம்பினேன். போகிற வழியில் எப். எம் ரேடியோவில் பராக் ஒபாமா பேசிக் கொண்டிருந்தார். ” 2001-ம் வருடத்தை விட மிக மோசமான, மிக நீளமான பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. ”

oOOo