மில்லியன் காலத்துப் பயிர்


கிழிந்த ஆடைகளுடன் அலங்கோலமாய் நின்றிருந்தாள்.

அழக் கூட திராணி இல்லாமல் வற்றிப் போயிருந்தன கண்கள். உடம்பு பூராவும் சிகரட்டால் சுட்டதைப் போல வடுக்கள்.

உடைந்து போன குரலில் சொன்னாள். ”அவனோட நான் பட்ட கஷ்டம் போதும்ப்பா. இனியும் என்னால பொறுமையா இருக்க முடியாது.”

‘பொறுத்துப் போம்மா.’ என்னும் அறிவுரை இனி செல்லுபடியாகுமா என்று சந்தேகமாய் இருந்தது.
pencil_photos08_thumb
கல்யாண நாள் இன்னும் கண்ணுக்குள் அப்படியே இருக்கிறது. எவ்வளவு அழகாய் இருந்தாள். ஜரிகை நெளியும் பச்சைப் பட்டுப்புடவை உடம்பை சுற்றியிருக்க, மேனியெங்கும் மின்னும் ஆபரணம். சூரிய ஜொலிப்புடன் புன்னகை.

இன்றைக்கு காய்ந்த கருவாடு போல பொலிவில்லாமல் நிற்கிறாள்.

சே! புத்தியில்லாத அந்த பேராசைக்கார மனிதனுக்கு இவளை தாரை வார்த்திருக்கக் கூடாது.

இவளை சீண்டி சீண்டி இன்றைக்கு ஒரு மூலையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறான்.

”அம்மா, இன்னும் ஒரே ஒரு தடவை…”

சொல்லி முடிக்கும் முன் அவள் வெடித்தாள். ”இதோட எத்தனை ஒரு தடவை ஆயிருச்சு? அவன் திருந்துவான்னு நம்பறிங்களா?”

அவளுக்குள் தகிக்கும் கோபத்தின் உஷ்ணம் அனலாக மூச்சுக் காற்றில் வெளிப்பட்டது.

அவ்வப்போது அவன் கொடுமை தாங்காமல் மிக லேசாய் அவள் வெளிப்படுத்தின சமிக்ஞைகள் கூட அவனுக்கு உறைத்த மாதிரி தெரியவில்லை.

மவுனமாய் தலையசைத்தேன். ”இது நாள் வரை உன்னை பொறுமையா இருக்கச் சொன்னதுக்கு என்னை மன்னிச்சிடும்மா. அனுபவத்திலிருந்து பாடம் கத்துக்காதவனை காப்பாத்தி என்ன பிரயோஜனம்? உன் இஷ்டம் போல செய்.”

பூமிகா வேகமாக திரும்பினாள். அவள் கோபத்தின் வெளிப்பாடு மாபெரும் பூகம்பமா அல்லது கடலைப் புரட்டிப் போடும் சுனாமியா என்று நான் கடவுளாயினும் இப்போது சொல்ல இயலாது.

  • சத்யராஜ்குமார்

[உருவகக் கதை]


சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை