ஏ. ஆர். ரஹ்மான்


இந்தியாவிலிருந்து நேற்று இறக்குமதியானது ‘ஜெய் ஹோ’ புத்தகம். எழுத்தாளர் சொக்கன் பரிசாகக் கொடுத்தது. பஸ்ஸிலும், ரயிலிலும், பஸ் ஸ்டாப்பிலுமாக இரண்டே நாளில் படித்து முடித்து விட்டேன்.

பொதுவாக ரயில் டனலுக்குள் போனதும், செல்போனில் இன்டர்நெட் துண்டிக்கப்பட்ட நிலையில்தான் புத்தகம் படிக்க ஆரம்பிப்பேன். சொக்கனின் எளிமையான எழுத்து நடையில் வழுக்கி விழுந்து எப்போது டனலை விட்டு ரயில் வெளியே வந்தது என்பது கூடத் தெரியாமல் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன்.

அ-புதினத்தில் ப்ளாஷ் பேக் உத்தியை நுழைத்தது சொக்கனின் சாமர்த்தியம். ஆஸ்கர் மேடையில் ஆரம்பித்த அத்தியாயம் அலுங்காமல் ரஹ்மானின் சின்ன வயதுக்குப் போய், மெதுவாய் அவர் வாலிபத்துக்கு வந்து மறுபடி ஆஸ்கார் மேடையில் முடியும் போதுதான் – அட இங்கேதானே ஆரம்பித்தார் என்று நினைவுக்கு வருகிறது.

ரஹ்மானின் பாடல் வரிகளைக் கொண்டே வைத்த அத்தியாயங்களின் தலைப்புகள் ரசிக்கும்படி இருந்தன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடித்ததும், அத்தியாயத்தின் தலைப்பு என்ன என்று மறுபடி ஒரு முறை பக்கங்களை புரட்டிப் பார்க்க வைத்தன என்பது மட்டுமல்ல; சேப்டரை படித்து முடிக்கும் வரை தலைப்பாக வைக்கப்பட்ட அந்தப் பாடல் ஐ பாட் இல்லாமலே காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது.

வாராந்திரிகளில் ரஹ்மான் பற்றி அவ்வப்போது படித்த சில தகவல்களை புத்தகத்தில் இருக்கும் தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நல்ல அனுபவம். ரஹ்மானை மணிரத்னத்திடம் அறிமுகப்படுத்தியது சுகாசினி என்றுதான் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். இப்புத்தகம் சொல்லும் தகவல் வேறு.

ரஹ்மான் இளமைக்காலங்களில் இரவெல்லாம் ஸ்டுடியோக்களில் வேலை செய்து விட்டு அப்படியே நேராக பள்ளிக் கூடம் போய் விடுவார் என்பன போன்ற சிம்பதி அயிட்டம் முதல், ரோஜா பாடல் பதிவுக்கு வாசிக்க வாத்தியக்காரர்கள் வராத நிலையில் அம்மாவின் ஆணையை நிறைவேற்றிய மனோகரா டச் வரை சரியான விஷயங்களை சரியான இடத்தில் நுழைத்து புத்தகத்துக்கு நாவல் தன்மையை வரவழைப்பதில் கில்லாடியாய் இருக்கிறார் சொக்கன்,

கேசட் கவரில் அத்தனை இசைக் கலைஞர்களின் பெயரையும் போட்டு கவுரவிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்த ரஹ்மான் போலவே, புத்தகத்தின் கடைசியில் புத்தகத்துக்கான தகவல் கொடுத்து உதவிய நண்பர்கள், இணைய தளங்கள் எல்லாவற்றையும் தொகுத்து அளித்திருப்பது நல்ல முன் மாதிரி.

நன்கு புகழ் பெற்று விட்ட நிலையிலும் நஸ்ரத் பதே அலிகானிடம் ரஹ்மான் கவ்வாலி கற்றுக் கொண்டார் போன்ற விஷயங்கள் வெற்றியாளர்களின் ரகசியம் என்ன என்பதை பிட்டுப் பிட்டு வைக்கிறது. இது போன்ற பயக்ரபி புத்தகங்களில் ஒருவரின் வாழ்க்கையை சொல்வதைக் காட்டிலும், அவரின் வாழ்க்கையிலிருந்து மற்றவர்களுக்கான பாடத்தை அடிக்கோடிட்டுச் சொல்வதின் அவசியத்தை உணர்ந்து அதை பிசகில்லாமல் செய்திருக்கிறார் சொக்கன்.

என்றோ மறைந்த தேசிய தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பை வறண்ட வார்த்தைகளில் பாடப்புத்தகங்களில் மட்டுமே வாசித்துப் பழகிய நமக்கெல்லாம் – கிழக்கு என்ற பதிப்பகமும், சொக்கன் போன்ற எழுத்தாளரும் இல்லையெனில் சம கால சாதனையாளர்களின் வாழ்க்கைக் கதைகளை ஜீவனுள்ள நடையில் படிக்கும் பாக்கியம் கிடைக்காமலே போயிருக்கும்.

ரயிலில் பக்கத்தில் அமர்ந்திருந்த தமிழ்ப் பெண், புத்தகத்தின் அட்டைப்படத்தில் ரஹ்மான் படத்தைப் பார்த்து விட்டு, “எக்ஸ்க்யூஸ் மீ. இந்தப் புத்தகம் எங்கே வாங்கினீங்க? ” என்றார்.

அமேசான் வெப்சைட்ல!” என்று புரை தீர்த்த நன்மை பயத்தேன்.

UPDATE (1/7/2014): இந்தப் புத்தகம் இப்போது PDF வடிவில் இலவசமாக இங்கே கிடைக்கிறது.