Updates from ஜூன், 2010 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சித்ரன் ரகுநாத் 10:36 am on June 13, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: கட்டுரை, , கவுண்டமணி, , செம்மொழி, தமிழ், வடிவேல்   

    வடிவேலகராதி 

    2050-ல் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டில் முனைவர் பேராசிரியர் ஆ.கா. தமிழ்ச்செங்கோட்டுவரியன் அவர்கள் வாசித்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
    ———————————————–
    ….தமிழில் வடிவேலகராதி என்று ஒன்றைக் கொண்டுவந்துவிடலாம் என்கிற அளவுக்கு புதிய சொற்றொடர்களும், வார்த்தைகளும் இனிய தமிழில் அக்காலகட்டத்தில் இயற்றப்பட்டிருப்பது காணவும் கேட்கவும் கிடைக்கின்றன. சினிமா என்ற ஒன்று இதற்கென மெனக்கெட்டு தன்னாலான சிறு பங்கை ஆற்றிக்கொண்டிருந்தது என்பது தற்கால அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. ”உதாரணத்திற்கு இஸ்.. யப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே” என்கிற ஒரு சொற்றொடர். இதுவரை நிகழ்ந்த நிகழ்வுக்கே கண்கள் சோர்ந்து ஒருவித மயக்க நிலையை உடலானது அடையத் தொடங்கிவிட்டபோது இனிவரும் நிகழ்வுகளை எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும் என்று பொருள்பட அமைந்த இந்த வாக்கியம் வடிவேலடிகளாரால் 2003 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

    வெற்றியாளன் என்ற அர்த்தம் கொண்ட தலைப்புடன் வந்த ஒரு சீரிய திரைப்படத்தில்தான் இவர் மிகவும் பரவலான புகழடைந்தாரென்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. பேச்சுத்தமிழில் மிக முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்தவர் இவர். திரைப்படங்களில் இவர் கோலோச்சி வந்த காலகட்டத்தில் இவர் பேசின வசனங்கள் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது மட்டுமல்லாமல் அவை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்றாடப் புழக்கத்திலும் சரளமாக உபயோகப்படுத்தப்பட்டன.

    இந்தியாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் சிலவற்றில்கூட ஊழியர்களிடையே இவை பரவலான சொல்லாடல்களாக இன்றும் காணப்படுகின்றன. உதாரணம் “நீ இதுவரை பணிபுரிந்ததுபோதும். இனிமேல் நீ வேறு எதுவும் செய்யவேண்டியதில்லை” என்று பொருள்பட சொல்லப்படும் வாக்கியம் “ஆணியே புடுங்க வேண்டாம்..”. ஓரிரு வார்த்தைகளிலேயே சுருக்கமாக பல அர்த்தங்களை இது விளக்கிவிடுகிறது என்ற வகையில் இதை ஒரு மிக முக்கியமான பேச்சு வழக்குப்பிரயோகமாகக் கொள்ளலாம்.

    இது மாதிரி கமல்ஹாசன் என்கிற நடிகர் நடித்த சிகப்பு ரோஜாக்கள் என்கிற திரைப்படத்தில் ”என்ன வூட்ல சொல்ட்டு வந்தியா” என்று பேசப்படுகிற வசனமானது “சாலையில் கவனமாகப் போகவில்லையெனில் கார் போன்ற வாகனத்தில் அடிபட்டு பரலோக பதவி அடைந்துவிட நேரிடும்” என்கிற எச்சரிக்கையை மறைமுகமாகச் சொல்வதுடன் “போய்வருகிறேன். நான் இனி திரும்பி வரமாட்டேன்” என்று சம்பந்தப்பட்டவர் வீட்டில் ஏற்கெனவே சொல்லிவிட்டு வந்து அதற்கேற்ப சாலைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி நடந்துகொள்கிறார் என்பதையும் மிக அழகாக எடுத்தியம்புகிறது. இவ்வகையில் இது தமிழின் அழியாப் புகழ்பெற்ற ஒரு வாக்கியமாகவும் நிலைபெற்றுவிட்டதென்றே சொல்லலாம்.

    இது போன்ற சொலவடைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போனால் ஒரு ஆயிரம் பக்க ஆய்வுக்கட்டுரையாகத்தான் அதை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பதால் அவைகளில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுதல் நலம் என்று தோன்றுகிறது.

    ‘ஒய் பிளட்? சேம் பிளட்’ என்கிற ஒன்று தனக்கேற்பட்ட அவமானகர கதிநிலை மற்றவருக்கும் ஏற்பட்டத்தை அறிந்து சந்தோஷம் கொள்ளும் மனப்பான்மையை எடுத்துச் சொல்கிற மிக எளிய வாக்கியம். இதில் ஆங்கில மொழியானது தாறுமாறாக சிதைக்கப்பட்டிருப்பது ஒரு முக்கிய விடயமாக இருந்தாலும் தமிழின் மிக முக்கிய வாக்கிய இணைப்புகளில் தலையானதாகக் கருதலாம்.

    இதே போல் ‘முடியல’ என்கிற வார்த்தை, சூழலையும் சந்தர்ப்பங்களையும் பொறுத்து அவரவர் வேவ்வேறு பொருள்கொள்ளும் வகையில் அமைந்த ஒரு சிறப்பான வார்த்தையாகும்.

    வடிவேலழகர் தவிர கவுண்டமணியார் என்கிறவரும் இதேபோல் புதிய அர்த்தங்களுடன் கூடிய தமிழ்ச் சொற்றொடர்களை தமிழுக்கு வழங்கியதில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார். இவர் உருவாக்கின ”அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்கிற வாக்கியம் பொது இடங்களில் பிறர் முன்னிலையில் தன் கையாலாகத்தனம் தெரிந்து கேவலமாக மாட்டிக்கொண்டு அவமானப்பட்டாலும்கூட அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மித மிஞ்சிய நகைப்புடன் இந்த வாக்கியத்தை நீட்டி முழக்கி உச்சரிப்பதன் மூலம் அந்நிலையை சமாளித்துவிட முடியுமென்கிற வலையில் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்த வாக்கியம் இன்னும் சில நூற்றாண்டுகளாவது தமிழில் வழக்கத்தில் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இவர் உருவாக்கின மற்ற சில அரிய சொற்றொடர்கள் ‘கொசுத்தொல்ல தாங்க முடியல’ என்பதும் ‘ஸ்டார்ட் த மீஜிக்” என்பதும்.

    இதுபோல் தமிழில் இப்போதைய வாழ்க்கை நடைமுறையில் புழக்கத்தில் இருக்கும் அரிய தமிழ் வாக்கியங்கள் சில:

    1. எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்
    2. ஏன் இந்தக் கொலவெறி?
    3. என்ன கொடும சரவணா இது?
    4. வந்துட்டான்யா வந்துட்டான்யா..
    5. ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்க் சாப்டற மாதிரி
    6. இப்புடுச் சூடு
    7. வேணாம்.. வலிக்குது.. அழுதுருவேன்..
    8. வரும்ம்ம்.. ஆனா.. வராது..
    9. பில்டிங் ஸ்ட்ராங்கு. பேஸ்மெண்ட் வீக்கு.
    10. அது போன மாசம். இது இந்த மாசம்.
    11. ஐயோ வட போச்சே..
    12. என்ன வெச்சு காமெடி கீமடி எதும் பண்ணலையே..

    சொல்ல வருகிற விஷயத்தை மறைமுகமாகவோ நேராகவோ மிக எளிய முறையில் சொல்வதற்கு உதவுகின்றன என்பதனால் செம்மொழியாம் தமிழ்மொழியில் இந்த வாக்கியப் பிரயோகங்கள் வரலாறுகள் தாண்டி நீடித்து நிலைத்திருக்கும் என்று மொழி ஆராச்சியாளர்கள் கருதுவதுடன் மேலும் இதுபோன்றவைகளை அதிக அளவில் திரைப்பட மின்தகடுகளிலிருந்து மக்கள் பெற்றுப் பயனடைய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். நாமும் இவைகளை செவ்வனே பின்பற்றுவோமாக….

     
  • சித்ரன் ரகுநாத் 8:27 am on March 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: ஃப்ளிக்கர், இந்தியா, கலாச்சாரம், , , தேடல், நவீன இந்தியா, பாரம்பரியம், புகைப்படங்கள், புகைப்படம்,   

    இந்தியா இவ்வளவுதானா? 

    India என்று கூகிளில் தேடினால் என்னெல்லாம் வருகிறது என்று ஒரு பொழுதுபோகாத பொம்மு மாதிரி ஒரு சின்ன ஆராய்ச்சியில் இறங்கியபோது சில விஷயங்கள் புலப்பட்டன. கூகுள் தேடுதல் முடிவுகளின் முதல் பக்கத்தில் வந்தது என்னவென்றால் கொஞ்சம் இந்திய வரைபடங்கள். சில தாஜ்மஹால் படங்கள். வெவ்வேறு நிறங்களில் இந்திய தேசியக் கொடி. அப்புறம் இந்தியா கேட் அல்லது கேட்வே ஆஃப் இந்தியா. தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் மேற்சொன்னவற்றின் கலவையாக திரும்பத் திரும்ப அதேதான்.

    சரி ஃப்ளிக்கரில் என்ன காட்டுகிறது என்று தேடிப்பார்த்தபோது, அது தேடிக்கொடுக்கும் ‘4,278,685 results’ களில் அதிகபட்சம் கண்ணில் படுவது யாதெனில்.. தலைப்பாகை அணிந்த ஆண்கள் மற்றும் காதில் மூக்கில் கழுத்தில் விதவிதமாக நகைகளும் தலையில் முக்காடும் அணிந்த பெண்கள். பிச்சைக்கார அல்லது ஏழ்மை நிலையிலுள்ள சிறுமிகள்-சிறுவர்கள். வெண்தாடி சாமியர்கள்-சாதுக்கள். இளைத்துக் கருத்த முதியவர்களின் சுருக்கம் விழுந்த க்ளோஷப் முகங்கள். மறுபடி தாஜ்மஹால். படகுகள். கலர்ப்பொடி.

    இந்தியா என்றால் இவை மட்டும் தானா என்று யோசனை வந்தது. வியக்கவைக்கிற அளவுக்கு வேறு பரிமாணங்கள் இந்தியாவுக்கு எத்தனையோ இருக்கிறதே!! ஏன் அவைகள் இந்தப் புகைப்படங்களில் சிக்கவில்லை என்கிற ஆச்சரியம் முளைத்தது.

    வேறு பரிமாணம் என்று நான் சொல்வது இந்தியாவின் நாகரீக வளர்ச்சி, நகரங்கள், நவீன தெருக்கள் மற்றும் கட்டிடங்கள், தொழிற்துறை முன்னேற்றங்கள், அழகு ததும்பும் இடங்கள், நவீன இந்தியாவின் மக்கள் இப்படியாக சில விஷயங்கள். கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் இவ்வாறாக சில புகைப்படங்கள் கிடைக்கின்றனதான்.

    நான் ஒரு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து கூகிளிலோ ப்ளிக்கரிலோ காட்டும் புகைப்படங்களை பார்த்திருந்தால் இந்தியா ஒரு ஏழை நாடு. அதன் அனைவரும் ஒருவித புராதனமான உடை அணிபவர்கள். பிச்சைக்காரர்களும், போதை புகைக்கிற சாதுக்களும் நிறைந்து காணப்படுவர். எங்கு பார்த்தாலும் வறண்ட நிலங்கள், குப்பை மிகுந்த நகரங்கள். கல்வியறிவு இல்லாத மக்கள். பாம்பாட்டிகள். யானைகள். எப்போதோ மன்னர்கள் கட்டிய ஒரு சில மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், கோயில்கள், மண் ரோடுகள் எட்செட்ரா என்றெல்லாம்தான் இந்தியாவைப் பற்றி ஒரு பிம்பம் கொள்வேன். அதாவது நான் சொல்வது அவ்வாறான புகைப்படங்களைப் பார்க்கும்போது தோன்றும் ஒரு பொதுவான, மேலோட்டமான, உடனடிப் பார்வை.

    ஏற்கெனவே ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் முடிந்த அளவு கச்சடா நாடாகக் காட்டி ஆஸ்காரும் வாங்கி இந்தியா பற்றிய ஒரு மோசமான ஆவணமாகப் பதிந்தும் போய்விட்டிருக்கிற நிலையில் இப்படியாக ஏற்படுகிற பிம்பம் சரியானதல்ல.

    பரத் பாலா தயாரித்த ஏ.ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் வீடியோவைப் பார்த்தபோது கூட மேற்கண்ட உணர்வுதான் தோன்றியது. பாலைவனம், இறுக்கமான முகங்களோடு ராஜஸ்தானிகள் என்று ஒரு வறண்ட நிலையை, ஏழ்மையைப் பறை சாற்றுவது போன்ற உணர்வை அந்த வீடியோ வெளிப்படுத்தியதாக ஒரு எண்ணம் தோன்றியது. இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாத யாராவது இந்த வீடியோவைப் பார்த்தால் இவ்வளவுதானா இந்தியா என்கிற மாதிரியான பிம்பம்தான் தோன்றும்.

    அது தவிர இந்தியா என்றாலே வட இந்தியா மட்டும்தான் என்கிற தோற்றத்தையே இதிலிருந்து இணையத்தில் புழங்குகிற புகைப்படங்கள் தருகின்றன. தென்னிந்தியப் புகைப்படங்கள் அதிகம் கண்ணில் தென்படுவது இல்லை. இந்தியாவிலிருக்கிற அமெச்சூர் மற்றும் தொழில்முறைப் புகைப்படக்காரர்கள், பத்திரிக்கைகளில் பணிபுரியும் புகைப்படக்காரர்கள் ஆகியோர்களின் கேமராக்கள் தென்னிந்தியாவின் பக்கமும் கொஞ்சம் ஃபோகஸ் செய்தால் நலம் பயக்கும். அல்லது வலையேற்றப் பட்ட புகைப்படங்களில் முக்கால்வாசி வெளிநாட்டவரால் கிளிக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். அவர்கள் எப்போதும் போல இந்தியாவின் எழிலை விட்டுவிட்டு ஏழ்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருந்திருக்கக்கூடும்.

    உண்மையான நவீன இந்தியாவின் அழகை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாய் இல்லையோ என்றுதான் தோன்றுகிறது. அப்படியே இருந்தாலும் கூட அவைகள் சரியான வகையில் இந்தியா பற்றிய இணைய பக்கங்களில் உபயோகப்படுத்தப்படவில்லை. அல்லது நல்ல புகைப்படங்களை இணைய பக்கங்களில் இணைக்கும்போது அவைகளின் குறிச்சொற்கள் மற்றும் கோப்புகளின் பெயர்கள் ஏனோதானோ என்று இருப்பதால் தேடியந்திரங்கள் சரியாகக் காட்டுவதில்லை என்று கூடச் சொல்லலாம். தேடியந்திரங்களில் குறிப்பிட்ட குறிச்சொற்கள் உபயோகித்துத் தேடும்போது மட்டுமே ஒரு சிலது கிடைக்கின்றன. அப்படியே கிடைத்தாலும் இந்தியாவின் பொதுவான லைஃப் ஸ்டைலை அவைகள் காட்டவில்லை என்பதுதான் குறை.

    கூகுளில் நம் பெயர் உள்ளிட்டுத் தேடும்போது எப்படி நம் சம்பந்தப்பட்ட வலைப்பக்கங்களை அழகாய்க் கச்சிதமாய் கொண்டுவந்து கொடுக்கிறதோ அது போலவே இந்தியா பற்றிய தலைசிறந்த புகைப்படங்களை இணையத் தேடலின் போது முன்னிறுத்த டெக்னாலஜியை உபயோகித்தால் இப்புகைப்படங்கள் சரியான முறையில் பார்வையாளர்களைச் நிச்சயம் சென்றடையும் என்பது நிச்சயம்.

    அதிகபட்சம் கிராமங்களால் நிறைந்திருக்கும் இந்தியாவில் புகைப்படங்களில் வேறு எதைத்தான் காட்டமுடியும் என்று கேள்வி எழலாம். எத்தனையோ இருக்கிறது. இந்தியா வண்ணமயமானது. இது ஒரு அற்புதமான பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் உள்ளடக்கியது. இந்தியா ஒரு வளரும் வல்லரசு நாடு. இந்தியாவில் வெளிநாடுகளைச் சார்ந்த சுற்றுலாவாசிகளைக் கவர என்னென்னவோ இருக்கின்றன. மலைவாசத்தலங்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். பிரம்மாண்டமான கோவில்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியம், நடனங்கள், நீர் நிலைகள், யோகா, தியானம், இயற்கை வைத்திய முறைகள், பசுமை, மக்கள், கல்வி, கலாச்சாரம், உணவு வகைகள் என இந்தியாவின் எத்தனையோ முகங்கள் புகைப்படக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் அதிரும் வண்ணங்களில் அம்சமாய்க் காட்சிப்படுத்தக் கிடைக்கின்றன.

    ஆனால், புகைப்படக்கலைக்குத் தீனி போடும் மிகத் தொன்மையான இந்திய தேசப் பாரம்பரியச் சின்னங்களை அரசு சிறந்த முறையில் பராமரிப்பதில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஒரு சில உதாரணங்களாக மஹாபலிபுரத்தில் பல்லவர்களின் ஒரு சிற்ப மண்டபம் அற்ப சங்க்யைக்கு ஒதுங்குவதற்காகப் பயன்படுவதும், சென்னை அருங்காட்சியகத்தில் சோழற்கால கல்வெட்டுக்களின் மேலேயே காதலர்கள் இதயம் வரைந்து அம்பு விட்டு siva loves priya போன்ற காவியங்களை மானாவாரியாகப் பொறித்து வைத்திருந்ததையும் சொல்லலாம். இந்த இடத்தில் சதா நாற்காலிக்குப் போட்டியிடும் அரசாங்கத்தைச் சாடுவதா அல்லது அலட்சியப் போக்குள்ள மக்களை குறை சொல்வதா என்றே தெரியவில்லை. ஆனால் இரண்டுமே ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ளதுதான் என்பதை மறுக்க முடியாது.

    இணையம் என்பது பரந்துவிரிந்து ஒரு மிக முக்கியமான ஊடகமாக வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் இந்தியாவை அதன் நவீன விஷயங்களை ஒரு உன்னத அழகியலோடு புகைப்படங்களில் காண ஆசையாயிருக்கிறது. அதை நிறைவேற்றும் பொறுப்பை சுற்றுலாத்துறையும் காமிராக்காரர்களும் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு கிழவர்களின் முகச்சுருக்கங்கள், தலைப்பாகை, மூக்கொழுகும் சிறுவர்கள் தாண்டி யோசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

    -சித்ரன்

     
    • நிரஞ்சன் 8:39 முப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      ///மலைவாசத்தலங்கள், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். பிரம்மாண்டமான கோவில்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியம், நடனங்கள், நீர் நிலைகள், யோகா, தியானம், இயற்கை வைத்திய முறைகள், பசுமை, மக்கள், கல்வி, கலாச்சாரம், உணவு வகைகள் என இந்தியாவின் எத்தனையோ முகங்கள் புகைப்படக்காரர்களுக்கு வரப்பிரசாதமாய் அதிரும் வண்ணங்களில் அம்சமாய்க் காட்சிப்படுத்தக் கிடைக்கின்றன.///

      Yes!!. India is rocking!!!!. அருமையான பதிவு.

    • துளசி கோபால் 8:48 முப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      அட! இன்னிக்கு இதையே வேறொரு நிலையில் நினைச்சேன். இங்கே இந்தியாவில் டிவியில் காண்பிக்கும் விளம்பரங்கள் டாப் க்ளாஸ். 20 , 30 விநாடிகளில் நச் ன்னு இருக்கு. ஷாம்பூ, ஸோப், நகைநட்டுக்கள், புடவைகள்தான் ஏராளம். இதைமட்டும் பார்க்கும் வெளிநாட்டினர் இந்தியா ஏகத்துக்கும் வளர்ச்சி அடைந்த அதி நவீன நாகரிகம் உள்ள நாடுன்னு நினைப்பாங்க.

      கிளம்பிவந்து பார்த்துட்டுப் போலாமுன்னு வருபவர்களுக்கு ‘சோதனை’ விமான நிலயத்துலேயே ஆரம்பிச்சுரும்.

      35 ஆண்டுகளுக்குப் பின் சென்னை வாழ்க்கையை அனுபவிக்க வந்த நான்……ஹூம்….

      அனுபங்களைப் புத்தகமாக எழுதத்தான் வேணும்.

    • Vijayashankar 9:17 முப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      உண்மையான அழகு பார்ப்பவர் கண்ணில் இருக்கு. அதை மறுக்க முடியாது. உலக பெரிய முதன்மை பணக்காரர்கள் வரிசையில் நான்கு இந்தியர்கள். இது போதும் உலகில் வளம் மிகுந்த நாடு என்று பறை சாற்றிக்கொள்ள. சிம்பிளாக இருப்பது நம் வழக்கம். நீங்கள் வெளிநாட்டில் ( ஏன் நானும் கூடத்தான் ) குப்பை கொட்டியதால் இந்திய மீது இது ஒரு இழி மோகம் ஆகிவிட்டது . ஆத்தூர் செந்தில் குமார் , திருச்சியில் ஒரு செந்தில் என அமெரிக்காவில் வாழ்ந்த இந்தியர்கள் புலம் பெயர்ந்து நாட்டுக்கு உழைப்பது உங்களுக்கு தெரியவில்லையா? ஏன் நான் இன்னும் டெவலப் ஆனா நேசன் என்று சொள்ளப்படுகிறோம், இந்த தாழ்வு மனப்பான்மையால் தான்!

      இந்த மாதிரி பேசுபவர்களை கேட்டு தான் அமெரிக்கா மோகம் குறைந்து இந்திய வந்து சேர்ந்தேன். மீண்டும் மீண்டும் அதை கேட்பது புளித்த மோர் போல இருக்கு.

      • சித்ரன் 12:20 முப on மார்ச் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

        விஜயசங்கர், இந்தக் கட்டுரை இணையப் புகைப்படங்களில் இந்தியாவின் தோற்றம் என்பது பற்றியதே தவிர இந்தியாவைப் பற்றி இழியோ பழியோ சொல்வதற்கல்ல. தவிர நான் எந்த வெளிநாட்டிலும் குப்பை கொட்டியவனல்ல. இந்தியாவில், சென்னையில் வசிக்கிற ஒரு எளிமையான ஆசாமி நான். நீங்கள் சொல்கிற மாதிரி உலகப்பணக்காரர்கள் வரிசையில் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் குடி தண்ணீர், அடிப்படை வசதிகள் இல்லாத எண்ணற்ற கிராமங்கள் தன்னிறைவு அடையாமல் இந்தியாவில் இருக்கிறதே. வளம் கொழிக்கும் நம் இந்தியாவில் “வளங்கள்” எங்கே யாருக்குப் போய் சேர்கின்றன என்பது கேள்வி. மற்றபடி திருச்சி செந்தில், ஆத்தூர் செந்தில் மற்றும் இந்தியா திரும்பிய உங்களுக்கும் வண்ணமயமான Incredible India சார்பில் வந்தனங்கள்.

    • சத்யராஜ்குமார் 4:49 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      சித்ரன், உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இதெல்லாம் ஷங்கர் படங்கள் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க பாடுபடுவது போலத்தான். இயற்கையாய் நிகழ வேண்டிய இவைகள் பெரும்பாலும் நம் நாட்டை பிரதிநிதிப் படுத்தும் அதிகாரம் கொண்டவர்களின் கையில் உள்ளது. ஒரு வேளை என்னைப் போல வெளி நாட்டில் குப்பை கொட்டியிருந்தால் இது போன்ற கட்டுரைகளை நீங்கள் எழுதாமல் போகக்கூடும்.

    • பொன்.சுதா 11:23 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல பதிவு. நிஜமான ஆதங்கம். வாழ்த்துக்கள் சித்திரன்…

    • prabu 11:47 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      arumai

    • சித்ரன் 11:52 பிப on மார்ச் 23, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நன்றி நிரஞ்சன், துளசி கோபால், விஜயசங்கர், SRK, பொன்.சுதா, பிரபு.

    • Satish 12:23 முப on மார்ச் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      Good article chithran ji… I too accept and regret for india portrayed as posted… Y dont we take a step, create a blog and show the other side (beauty, nature, culture etc.) of our country. Hope many of us got a very good picture collections portraying beautiful india.

    • padmahari 12:03 பிப on மார்ச் 24, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நல்ல பதிவு. பாராட்டுக்கள் சித்ரன்! எனக்கும் இதே எண்ணங்கள்தான் பலமுறை ஏற்பட்டன. இந்தியாவைப் பற்றிய சில உரைகள நிகழ்த்தும்போது, கூகுளில் தேடினால் கிடைக்கும் படங்களில்…..
      //நான் ஒரு வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து கூகிளிலோ ப்ளிக்கரிலோ காட்டும் புகைப்படங்களை பார்த்திருந்தால் இந்தியா ஒரு ஏழை நாடு. அதன் அனைவரும் ஒருவித புராதனமான உடை அணிபவர்கள். பிச்சைக்காரர்களும், போதை புகைக்கிற சாதுக்களும் நிறைந்து காணப்படுவர். எங்கு பார்த்தாலும் வறண்ட நிலங்கள், குப்பை மிகுந்த நகரங்கள். கல்வியறிவு இல்லாத மக்கள். பாம்பாட்டிகள். யானைகள். எப்போதோ மன்னர்கள் கட்டிய ஒரு சில மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், கோயில்கள், மண் ரோடுகள் எட்செட்ரா என்றெல்லாம்தான் இந்தியாவைப் பற்றி ஒரு பிம்பம் கொள்வேன். அதாவது நான் சொல்வது அவ்வாறான புகைப்படங்களைப் பார்க்கும்போது தோன்றும் ஒரு பொதுவான, மேலோட்டமான, உடனடிப் பார்வை.//
      என்பதுதான் நிதர்சனம். இதை எழுத நினைத்ததுண்டு, ஆனால் அதை உங்கள் பதிவில் படித்ததில் மிக்க மகிழ்ச்சியும், திருப்தியும்! வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றி.
      http://padmahari.wordpress.com

  • சித்ரன் ரகுநாத் 12:14 pm on January 12, 2010 நிரந்தர பந்தம் | மறுமொழி
    Tags: அவதார்   

    அவளும் அதுவும் 

    சமீபத்தில் என் நண்பர் கெளதம் பிகாஸா வெப்-பில் அவர் க்ளிக்கிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். முன்பே ஒரு பதிவில் நான் எழுதியிருந்ததுபோல கெளதமுக்கு பறப்பன, ஊர்வன பற்றிய ஆராய்ச்சியிலும் அது சம்பந்தமான புகைப்படங்களிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆக அவர் எடுக்கிற பெரும்பாலான புகைப்படங்கள் புழு, பூச்சி அல்லது பறவைகளாகவே இருக்கும். அந்த மாதிரி ஒரு ஆல்பத்தைத்தான் அவர் எனக்கு அனுப்பியிருந்தது. அதில் ஒரு ஈ-யின் புகைப்படத்தைப் பார்த்ததும் திடீரென எனது கோக்குமாக்கான கிரியேட்டிவிட்டி நியூரான்கள் உயிர்கொள்ள சமீபத்தில் பார்த்த ‘அவதார்’ படத்தின் காட்சியொன்று ஃப்ளாஷ் அடித்தது. எங்கிருந்தோ குதித்து ஒரு பாறையின் மீது பொசிஷன் எடுக்கிற பேண்டோரா கிரகவாசியான நெயித்திரி (Neytiri) (அல்லது சாம் வொர்த்திங்டன் அழைப்பது போல நேத்தீர்ரி) -யின் ஒரு ஸ்டில் ஞாபகத்திற்கு வந்தது. தேடியபோது கூகிளில் கிடைத்தது.

    படத்தில் இந்த நெயித்திரி கேரக்டரை உற்று கவனித்திருப்பீர்களேயானால் (நிச்சயம் கவனித்திருப்பீர்கள் ) அவளின் அசைவுகள், நிற்பது நடப்பது எல்லாமே ஒரு பூனை அல்லது அதே போன்றதொரு விலங்கினையொத்ததாக இருப்பதைக் காணலாம். சீறுவதும் கூட. இரண்டாம், மூன்றாம் தடவை பார்க்கும்போது படத்தில் நெயித்திரியானவள் ஓவர் சீன் போடுகிறாளோ என்று தோன்றினாலும் அவள் மக்கள் உள்ளத்தை கொள்ளைகொண்ட அருமையான பாத்திரப் படைப்பு என்பதை மறுப்பதற்கில்லை.

    கெளதமின் அருமையான புகைப்படத்திற்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதுபோல என் கற்பனைக்குத் தோன்றியது. உங்களுக்கு எப்படித் தெரிகிறது பாருங்களேன்.

     
c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி